அன்வார் மீதான திறமையில் நம்பிக்கையை இழந்து விட்டனர் மக்கள்

கோலாலம்பூர், மார்ச் 5 –

மக்களவையில் முகைதீன் யாசின் பகிரங்க குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் திறமையில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், இன்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

மலேசியர்களுக்கு தற்போது ரிங்கிட்டின் மீது நம்பிக்கை இல்லை. இந்த வட்டாரத்தில் உள்ள நாணயங்களுடன் ஒப்பிடுகையில் மலேசிய ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து வலுவிழந்து வருவதே இதற்கான காரணமாகும் என்று பாகோ எம்.பி.யான முகைதீன் குறிப்பிட்டார்.

அந்நிய நாணயங்களை சேமிப்பதை மக்கள் தங்களின் தேர்வாக கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை மாத வரையிலான தரவுகள்படி நாட்டின் வங்கிகளில் 25 ஆயிரம் கோடி வெள்ளி மதிப்பிலான அந்நிய நாணயங்கள் வைப்புத்தொகையாக முதலீடு செய்யப்பட்டுள்ளன.

தாம் பிரதமராக இருந்த காலகட்டத்தில் வங்கிகளின் வைப்புத்தொகையாக முதலீடு செய்யப்பட்ட 15 ஆயிரம் கோடி வெள்ளியாக இருந்த அந்நிய நாணய மதிப்புடன் ஒப்பிடுகையில் தற்போது 25 ஆயிரம் கோடி வெள்ளியாக உயர்ந்துள்ளது. மலேசிய வரலாற்றில் வங்கிகளில் இந்த அளவிற்கு அந்நிய நாணயங்கள் சேமிப்பாக மக்கள் குவித்து வைத்து இருப்பது இதுவே முதல் முறையாகும் என்று டான்ஸ்ரீ முகைதீன் தெரிவித்தார்.

தனது சொந்த நாட்டு நாணயத்தைவிட அந்நிய நாணயங்கள் மீது மக்கள் ஏன் இந்த அளவிற்கு நம்பிக்கையும், மோகமும் கொண்டுள்ளனர் என்பது ஆராயப்பட வேண்டிய முக்கிய கேள்வியாகும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.

தம்மை கேட்டால் இதற்கு விடை சுலபமாகும். நாட்டின் பொருளாதாரத்தை நல்ல முறையில் நிர்வகிக்கும் ஆற்றலையும், திறனையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கொண்டிருக்கவில்லை என்பதே இதற்கான விடையாகும் என்று டான்ஸ்ரீ முகைதீன் மக்களவையில் வாதிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்