அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மீது, நிந்தனைச் சட்டம் ஏன் பாயவில்லை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 –

சண்டைக்கு தயாராக இருப்பதைப் போன்று வாளை ஏந்திக்கொண்டு நிற்கும் காட்சியைக்கொண்ட புகைப்படத்தை தனது முகநூலில் பதிவேற்றம் செய்து, உருட்டல், மிரட்டல் விடுத்து வரும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ் மீது இதுவரையில் நிந்தனைச் சட்டம் பாயாமல் இருப்பது ஏன் என்று செனட்டர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாள்- ளை ஏந்திக்கொண்டு, ஜப்பானில் எடுத்த அந்தப் புகைப்படத்தை தனது முகநூலில் டாக்டர் அக்மால் கடந்த மார்ச் 14 ஆம் தேதி பதிவேற்றம் செய்துள்ளார். அஞ்சி, அண்டி வாழ்வதைவிட எதிர்த்து நின்று சாவதே மேல் என்ற வாசகத்தையும் அந்த படத்தின் கீழ் டாக்டர் அக்மால் குறிப்பிட்டுள்ளதாக செனட்டர் தி லியான் கெர் சுட்டிக்காட்டினார்.

டிஏபி மூத்த தலைவர்லிம் கிட் சியாங், மலாய்க்காரர் அல்லாத ஒருவர் நாட்டின் பிரதமராக வர முடியும் என்று கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள்காட்டி பேசியதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேல் விசாரணை நடத்தினர்.

ஆனால், நீண்ட வாளை ஏந்திக்கொண்டு பகிரங்கமாக போஸ் கொடுத்து இருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால்- இதுவரையில் ஏன் விசாரணை செய்யப்பட வில்லை, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, குறைந்த பட்சம் ஓர் எச்சரிக்கையைக்கூட ஏன் விடுக்கப்படவில்லை என்று டிஏபி-யைச் சேர்ந்த செனட்டர் தி லியான் கெர் கேள்வி எழுப்பினார்.

ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால், மிரட்டல் மட்டுமே விடுக்கப்படுவதாக நோக்கப்படவில்லை. மாறாக, கையில் நீண்ட வாள் ஏந்திக்கொண்டு இருக்கிறார். இது ஒரு தவறான முன்னுதாரணம் மட்டுமல்ல. இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக அந்த இளைஞர் பிரிவுத் தலைவர் முயற்சிக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. .

அந்த அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் மீது நிந்தனை சட்டம் பாய வேண்டும் என்று செனட்டர் தி லியான் கெர் கேட்டுக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்