அறிவியல் கண்காட்சியில் அசத்திய தேசிய வகை பத்தாங்காலி தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

அறிவியல் துறையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆர்வத்தையும், இலைமறை காய் போல் இருக்கும் ஆற்றல்களையும் வெளிக்கொணர அவர்களுக்கு உள்நாட்டு அளவிலும் அனைத்துலக அளவிலும் நடத்தப்படும் அறிவியல் புத்தாக்கப் போட்டிகள் பெரும் துணை நிற்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக அளவில் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சிகள் மற்றும் புத்தாக்கப் போட்டிகளில் பங்கேற்று தங்கள் குடும்பத்தினருக்கும் தங்கள் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.

அவ்வகையில் கடந்த 25 – 11- 2023ஆம் தேதி அனைத்துலக அளவிலான 2023ஆம் ஆண்டிற்கான கோலாலம்பூர் பொறியியல் மற்றும் அறிவியல் கண்காட்சி ஒன்று, ஶ்ரீ கெம்பாங்கான் மைன்ஸ் அனைத்துலகக் கண்காட்சி மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மூன்று தினங்கள் நடைபெற்ற இந்தப் பொறியியல் மற்றும் அறிவியல் கண்காட்சியில் சுமார் 400 புத்தாக்கக் கண்காட்சிக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அதில் 72 அறிவியல் புத்தாக்க படைப்புகள் ஆரம்பப்பள்ளி மாணவர்களால் காட்சிக்கு வைக்கப்பட்டன. 70 அணிகளைப் பின்தள்ளிய நிலையில் சிலாங்கூர் தேசிய வகை பத்தாங்காலி தமிழ்ப்பள்ளி மாணவர் அணியினர் சாதனை படைத்தனர்.
இப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு அணியினர் தேசிய ரீதியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைக் கைப்பற்றினர்.

இதில் காய்கறியில் இயற்கைத் திரவ வண்ணத்தைத் தயாரித்து தங்கள் திறனை வெளிப்படுத்தினர் முதலாவது குழு மாணவர்கள். நளினாலினி த/பெ தனசீலன், சதீஸ் த/பெ இராஜன், டிகம்பரேஸ்வரன் த/பெ தனபிரகாஷ் ஆகியோர் முதலாவது குழுவில் இடம்பெற்று சாதனை படைத்தனர்.
இரண்டாவது குழுவில் பங்கு கொண்ட மாணவர்கள் வாழைப்பழத்தோலில் அடுப்புக்கரி தயாரித்து தங்கள் திறனை வெளிப்படுத்தி சாதனை படைத்தனர். அவர்கள் ஜீவகன் த/பெ இராமநாதன் (12 வயது), ஹாசினி த/பெ இராமகிருஷ்ணன் (12 வயது), சம்யுக்தா த/பெ வசந்தன் (வயது 10) ஆகியோர் ஆவர்.

இப்பள்ளி மாணவர்களின் சாதனைக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பெருமாள் இராமன் உட்பட புறப்பாட நடவடிக்கை துணைத்தலைமையாசிரியர் திருமதி சிவகாமி சுந்தரி திருவேங்கடம், குழு ஒன்றைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் திருமதி அமுதசூரியா மற்றும் திரு தனசீலன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

குழு இரண்டைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் திருமதி லீலா, திருமதி சரளா, திருமதி சித்ரகலா, திருமதி நிவேதா ஆகியோரும் இச்சாதனைக்கு முக்கிய பங்காற்றினர்.
350 மாணவர்கள் பயின்று வரும் பத்தாங்காலி தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிலும், புறப்பாட நடவடிக்கைகளிலும் அதீத கவனம் செலுத்தி வரும் பள்ளிகளில் ஒன்றாகும்.
மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பள்ளியிலுள்ள அனைத்து ஆசிரியர்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும்.

பத்தாங்காலி தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்தச் சாதனையைத் தொடர்ந்து அனைத்துலக அளவில் நடத்தப்படும் பொறியியல் மற்றும் அறிவியல் கண்காட்சிகளிலும் பங்கு கொண்டு மாணவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்கு ஆசிரியர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
அதே வேளையில் மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்குப் பெற்றோர்கள் அளித்த ஆதரவு உற்சாகமூட்டும் அளவில் இருந்துள்ளது.
இந்தச் சாதனைக்காக மாணவர்கள் இரண்டு மாத காலம் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஓர் அறிவார்ந்த சமூகமாக உருவாக்குவதற்குச் சரியான இலக்கை நோக்கி மாணவர்களை வழிநடத்தி வரும் பத்தாங்காலி தலைமையாசிரியர் திரு.பெருமாள் இராமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்கும், வாழ்த்துதலுக்கும் உரியவர்கள் ஆவர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்