தெலுக் இந்தானில் இந்திய மாணவர்களுக்கு அங்கீகாரம் !

அண்மையில் தெலுக் இந்தானில் ஷாய்னிங் ஸ்டார்ஸ் குழுவின் ஏற்பாட்டில் இங்குள்ள பூங்கா ராயா மண்டபத்தில் மிகச் சிறப்பாகச் சாதனை படைத்த தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்குச் சிறப்பு செய்யும் வகையில் கல்விக் கருத்தரங்குடன் கூடிய பிரமாண்ட பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

2 நாள்களுக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களுக்கான விளக்கம், மாணவர்களுக்குத் தன்முனைப்புப் பேச்சு, விழிப்புணர்வு, ஒழுக்கம், அடிப்படை தொடர்பு, உயர்ந்த ஆளுமை, தலைமைத்துவம் குறித்து கருத்தரங்கு நடத்தப்பட்டது.

ஷாய்னிங் ஸ்டார்ஸ் குழுவின் தலைவரும், சமூகச் சேவகருமான மாஸ்டர் உகான்தருண் சுகுமார் ஏற்பாட்டில் முதன் முறையாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் கீழ்ப்பேரா மாவட்டத்திலிருந்து 11 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் 2022ஆம் ஆண்டு அனைத்துலக, தேசிய, மாநில நிலையிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அவர்களோடு எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் உட்பட அனைத்துப் பாடங்களிலும் சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. குறிப்பாக, எஸ்.பி.எம் தேர்வில் 9A அல்லது அதற்கும் மேற்பட்ட ‘A’-க்கள் பெற்றவர்களும், எஸ்.டி.பி.எம் தேர்வில் 3.00 புள்ளிகள் எடுத்தவர்களும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.

இதைத் தவிர்த்து முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 73 பேருக்குச் சிறப்பு நடன விருதும் வழங்கப்பட்டது என மாஸ்டர் உகான்தருண் தெரிவித்தார்.

நடனத் துறையில் இந்த மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தெலுக் இந்தான் கான்வண்ட் இடைநிலைப்பள்ளி தேர்தெடுக்கப்பட்டு சுழற்கிண்ணம் வழங்கப்பட்டது. தொடக்கப்பள்ளி நிலையில் தெலுக் இந்தான் நடேசா பிள்ளை தமிழ்ப்பள்ளிக்கு இந்தச் சுழற்கிண்ணம் வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டது.
.
ஆரம்பள்ளிக்கான சிறந்த ஸ்லைட்-க்கான விருதைப் பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பளியைச் சேர்ந்த குமாரி தனுஷா சுரேந்திரன் தட்டிச் சென்றார். புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்த பள்ளியாகப் பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிறந்த ஆசிரியருக்கான விருதைத் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் சரஸ்வதி வெள்ளையனுக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. அவர் பணியில் இருக்கும்போது பள்ளிக்குப் பல வசதிகளைக் கொண்டுவர பல முயற்சிகளை முன்னெடுத்தார். மேலும், ஒரு பாலர் பள்ளியையும் தொடங்க முக்கிய பங்கினை வகித்துள்ளார். மற்றொரு சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பாத்தாக் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ஆறுமுகம் வேலுவுக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. அவரது பணி காலத்தில் பள்ளியில் ஒரு மண்டபத்தைக் கட்டி முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும் கல்விக் கேள்விகளில் சிறந்த விளங்க வேண்டும் என்ற குறிக்கோளோடும் வேட்கையோடும் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கவே இவ்விரு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ததாக உகான்தருண் சொன்னார்.

கீழ்ப்பேரா மாவட்டக் கல்வி இலாகாவின் துணை அதிகாரி, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இக்கருத்தரங்கில் கலந்து சிறப்பித்தனர்.

ஒரு பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா எவ்வாறு நடைபெறுமோ, அதே மாதிரி பட்டமளிப்பு அங்கி, அரச கருவிகள் ஆகியவற்றை உட்படுத்தி நடந்தது. பெற்றோர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.

இந்நிகழ்ச்சியில், துணைப் பிரதமரும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஷாஹிட் ஹமிடியின் இந்திய சமூகநலன் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நம் இந்திய மாணவர்களின் அழியா சொத்து கல்வி மட்டுமே. நம்மையும் இந்த உலகத்தையும் மாற்றி நல்வழியில் கொண்டு செல்லக்கூடிய பெரும் சிறப்பு கல்விக்கு இருக்கிறது. “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்று யவை” என்கிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். அதாவது உலகத்தில் மனிதர்களுக்குக் கல்விதான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள்.

அவரைத் தொடர்ந்து தன்முனைப்பு உரையாற்றிய மலேசிய சிறைச்சாலைத் துறையின் துணை ஆணையர் அண்ணாதுரை காளிமுத்து, மாணவர்களும் இளைஞர்களும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் தீமைகள், விளைவுகள் குறித்து தெள்ளத் தெளிவாக விளக்கினார்.

கல்வியில் சிறந்தவர்கள் ஒரு சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுவார்கள். ஒரு செல்வந்தன் காலச் சூழ்நிலையால் ஏழையாகலாம். ஆனால், கல்வி அறிவுடையவன் அவ்வாறு இல்லை; கல்வி மூலம் தமது நிலையை மேலும் உயர்த்திக் கொள்வான்.

இந்திய மாணவர்கள் அனைவரும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால் கல்வியில் அதிக கவனம் செலுத்தி நன்றாகப் படிக்க வேண்டும். புறப்பாட நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வேண்டும்.

எனவே, இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் தீய வழியில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பெற்றொரும் ஆசிரியர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் உகான்தருன் கூறினார்.

ஆதரவும் வாய்ப்பும் இருந்தால், ஒவ்வோர் ஆண்டும் இதே மாதிரியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய தாம் தயாராக இருப்பதாகவும், மாவட்ட நிலையைக் கடந்து அடுத்தடுத்த நிலைகளில் ஏற்பாடு செய்ய முயற்சி செய்வதாகவும் அவர் மேலும் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்