ஆர்சிபி அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணம்?

இந்தியா, மார்ச் 30-

கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்ததற்கு அந்த அணியின் பவுலிங் யூனிட் மிகப்பெரிய காரணம். தோல்வி அடைந்த 2 போட்டிகளிலும் பவுலிங் படுமோசமாக இருந்திருக்கிறது.

ஆர்சிபி அணி இந்த ஐபிஎல் போட்டியிலும் வழக்கமாக ஆடும் ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறது. இதனால் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. அந்த இரண்டு போட்டிகளிலும் மோசமாக பந்துவீசியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

  ஆர்சிபி அணி இந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கினாலும், பஞ்சாப் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

ஆனால், கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்வி அடைந்திருக்கிறது ஆர்சிபி அணி. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங் செய்தது ஆர்சிபி. மற்ற இரண்டு போட்டிகளிலும் இரண்டாவதாக பந்துவீசியது.

இந்த இரு போட்டிகளிலும் தான் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியிருக்கிறது. அதாவது ஆர்சிபி அணி பந்துவீச்சு சரியில்லாத காரணத்தாலேயே சென்னை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிராக தோற்றிருக்கிறது.

ஆர்சிபி அணியில் வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என இரண்டிலும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு முத்திரைப்பதிக்ககூடிய வீரர்கள் யாரும் இல்லை. முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் கடிவாளம் கட்டியதுபோல் ஒரே மாதிரி பந்துவீசிக் கொண்டிருக்கிறார்கள்.

சூழலுக்கு ஏற்ப பந்துவீச்சில் மாற்றம் கொண்டு வருவதற்கு அவர்கள் துளியும் முயலாத நிலையில், யாஷ் தயாள் அவர்கள் இருவருக்கும் போட்டியாக அதிக ரன்கள் கொடுக்கும் ரேஸில் முந்திக் கொண்டு வருகிறார்.

இன்னொரு புறம் கேம்ரூன் கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரை பயன்படுத்துவதில் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறார் கேப்டன் டூப்ளெசிஸ். இதனால் ஒட்டுமொத்த ஆர்சிபி பவுலிங் யூனிட்டும் திக்கு திசை தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஏலத்தில் சரியான பவுலர்களை அந்த அணி டார்கெட் செய்திருந்தால் இப்பிரச்சனை வந்திருக்காது.

ஆனால் அந்த அணி இதனை செய்யவில்லை. இப்படியே ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட் இருந்தால் வழக்கம்போல் இந்த ஆண்டு மற்ற எல்லா அணிகளுக்கும் முன்னால் வீட்டுக்கு செல்ல தயாராகிவிட வேண்டியது தான். ஆர்சிபி ரசிகர்கள் வழக்கம்போல் சமூக ஊடகங்களில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்