ஆர்.பி.தி இயக்கம் ஏற்பாட்டில் இலவச கல்விக் கருத்தரங்கு

ஓர் அரசாங்க சாரப்பற்ற அமைப்பான ஆர்.பி.தி எனும் இராஜயோக சக்தி மிகுந்த ஆழ்நிலை தியான இயக்கம், தனது சமூக கடப்பாட்டின் ஒரு பகுதியாக 2024 ஆம் ஆண்டுக்கான ஆர்.பி.தி- யின் இலவச கல்விக் கருத்தரங்கு இன்று சனிக்கிழமை காலை முதல் மாலை வரையில் கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் Pusat Asasi Sains மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தொழில் உலகில் நுழையத் தயாராக இருக்கும் மாணவர்களுக்கு தன்முனைப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை மையக்கருத்தாக கொண்டு நடத்தப்பட்ட இந்த ஒரு நாள் கருத்தரங்கில் நாடு தழுவிய நிலையில் ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஆர்.பி.தி எனப்படும் இராஜயோக சக்தி மிகுந்த ஆழ்நிலை தியான இயக்கம், 1996 ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ டாக்டர் வி. பாலகிருஷ்ணன் மற்றும் அவர்தம் துணைவியார் டத்தின் ஸ்ரீ சுந்தரி பாலகிருஷ்ணன் அவர்களால் நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும்.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நாடு தழுவிய நிலையில் பல்வேறு சமூக சேவை நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொது மக்களுடன் சமூக சேவைத் திட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கும் ஆர்.பி.தி இயக்கம், இன்று நடத்திய 2024 ஆம் ஆண்டிற்கான இலவச கல்வி கருத்தரங்கில் படிவம் 4. 5 ஆகியவற்றை சேர்ந்த 500 மாணவர்களும், எஸ்.தி.பி.எம், கல்லூரி மற்றும் பல்லைக்கழகங்களில் பயிலும் 500 மாணவர்களும் கலந்து கொண்டதாக இக்கருத்தரங்கின் ஏற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த டாக்டர் கோமதி, திசைகளிடம் விவரித்தார்.

இக்கருத்தரங்களில், ஆர்.பி.தி இயக்கத்தின் ஸ்தாபகரும், தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் வி. பாலகிருஷ்ணன், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்.

மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் மலாயா பல்கலைக்கழகத்தின் Pusat Asasi Sains இயக்குநர். இணை பேராசிரியர் முனைவர் ஃபராசிலா யூசுப், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை பிரதிநிதித்து சிறப்பு வருகைப்புரிந்தார்.

பல்வேறு தொழில் துறைகளில் பிரபலமானவர்களின் “வெற்றிப் படிகள்” எனும் அனுபவ பகிர்வு, மாணவர்களை எதிர்காலத்தில் வெற்றிகரமானவர்களாக உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆர்.பி.தி- இயக்கத்தின் இக்கல்விக் கருத்தரங்கு அமைந்திருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்