ஆறாவது முறையாக மாபெரும் பேரணி நடத்தப்படும், அரசாங்கத்திற்கு BERSIH எச்சரிக்கை!

கோலாலம்பூர், மார்ச் 22.

தாங்கள் முன்வைத்துள்ள சீர்த்திருத்த கொள்கைகளை நிறைவேற்றாவிட்டால், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் தவணை முடிவதற்குள், மாபெரும் அளவிலான 6ஆவது பேரணி நடத்தப்படும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான BERSIH எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாங்கள் முன்வைத்திருக்கும் 10 கோரிக்கைகளை நடப்பு அரசாங்கத்தால் இந்த தவணைக்குள் நிறைவேற்ற முடியும். ஆனால், அக்கோரிக்கைகளை அமல்படுத்த அரசாங்கம் முன்வராவிட்டால், தாங்கள் கூறியபடி பேரணியை நடத்துவது உறுதி என BERSIH தலைவர் பைசால் அப்துல் அஜிஸ் கூறினார்.

நடப்பு அரசாங்கம் வலுவாக உள்ளதால் தங்களது கோரிக்கைகளை நினைத்தால் அவர்களால் சீர்த்திருத்தங்களை நிறைவேற்ற முடியும். அதன் காரணமாகவே, அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளிக்க தாங்கள் தொடங்கியிருப்பதாக கூறிய பைசால் அப்துல் அஜிஸ் இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கம் வரையில் அரசாங்கத்திற்கு BERSIH அவகாசம் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் சீர்த்திருத்தம், தேர்தல் சட்டங்களையும் நடைமுறைகளையும் சீரமைத்தல், தேர்தல் குற்றச்செயல் சட்டத்தில் சீர்த்திருத்தம், அரசியல் நிதி பெறுவதில் சீர்த்திருத்தம் என 10 கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை BERSIH கடந்த மாதம் பிரதமரிடம் சமர்ப்பித்திருந்தது.

BERSIH, ஆகக்கடைசியாக 2016ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி முன்னாள் தலைவர் மரியா சின் தலைமையில் அதன் 5ஆவது பேரணியை கோலாலம்பூர்-ரில் நடத்தியிருந்தது. அதில், முந்தைய பிரதமர்களான துன் டாக்டர் மகாதீர் மொஹமட், தான் ஸ்ரீ முஹிடின் யாஸின் ஆகிய இருவர் உட்பட 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்