இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை கண்காணிப்பதற்கு சிறப்பு கண்காணிப்புக்குழு தேவையில்லையாம், டத்தோ ரமணன் கூறுகிறார்

கோலாலம்பூர், மே 18-

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக, பிரத்தியேகமாக குறிப்பிட்ட அரசாங்க ஏஜென்சிக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் திட்டங்களை கண்காணிப்பதற்கு சிறப்பு கண்காணிப்புக் குழு தேவையில்லையாம் என்று தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ R. ரமணன் தெரிவித்துள்ளார்.

இந்திய சமுதாயத்திற்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டில், சம்பந்தப்பட்ட தரப்பினர் நேர்மையாக தங்கள் கடமையை செய்கின்ற பட்சத்தில் இது போன்ற கண்காணிப்புக்குழுக்கள் அவசியமில்லை என்று சுங்கை பூலோ எம்.பி.யுமான ரமணன் கருத்து தெரிவித்துள்ளார்.

தம்மைப் பொறுத்தவரையில் நிறைய குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டன. இனியும் இது போன்ற குழுக்கள் அவசியமில்லை என்று ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சமுதாயத்தின் சமூகவியல், பொருளாதரா உருமாற்றுப்பிரிவான மித்ராவின் நிதி ஒதுக்கீட்டை கண்காணிப்பதற்கு சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று அண்மையில் கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ கோரிக்கை விடுத்து இருந்தார்.

குறிப்பாக, மித்ராவின் திட்டங்கள், அந்த திட்டங்களில் யாருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது, எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது, எத்தகைய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன, அவை சமுதயத்திற்கு பயனான திட்டங்கள்தானா? அந்த திட்டங்கள் இந்திய சமுதாயதின் இலக்குக்கு உரிய மக்களை சென்றடைகின்றனவா? முதலியவற்றை கண்காணிப்பதற்கு பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய ஒரு சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று சார்லஸ் சாண்டியாகோ அறைகூவல் விடுத்து இருந்தார்.

காரணம், மித்ராவின் பணம், இலக்குக்கு உரிய இந்திய சமுதாயத்தை சென்றடையாமல் போனதற்கு அந்தப் பணம் யாருக்கு ஒதுக்கப்படுகிறது என்பதை கண்காணிப்தற்கு சிறப்புக்குழு இல்லாமல் போனதே முக்கிய காரணமாகும் என்று சார்லஸ் சாண்டியாகோ சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் தொடர்பில் மித்ராவின் நிதி ஒதுக்கீட்டை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக்குழுவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைக்க வேண்டும் என்று சார்லஸ் சாண்டியாகோ கோரிக்கை விடுத்து இருந்தார்.

ஆனால், அப்படியொரு சிறப்புக்குழு தேவையே இல்லை என்று ரமணன் இன்று அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்