இந்திய சமூகத்திற்கு உதவுவதால் மலாய் சமூகத்தினரின் ஆதரவை இழந்துவிட மாட்டீர்கள்! -பிரதமருக்கு செனட்டர் சிவராஜ் நினைவுறுத்து

பெடாலிங் ஜெயா, மார்ச் 19 –

இந்திய சமூகத்தின் சமூக பொருளாதாரத்தை உயர்த்தும் கடப்பாட்டைக் கொண்டிருந்தால் பிரதமர் டத்துக் ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் METRICULATION-னில் அச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஈராயிரத்து 500 இடங்களை வழங்க வேண்டும் என அரசாங்க தரப்பு செனட்டர் சி.சிவராஜ் வலியுறுத்தினார்.

அனைத்து விவகாரங்களிலும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்திய சமூகத்திற்கு உதவிகள் தேவைப்படுவது பரவலாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆகையால், இந்திய சமூகத்திற்கு உதவுவதால், தமக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு கிடைக்காது என பிரதமர் பயப்படக்கூடாது எனவும் அவர் நினைவுறுத்தினார்.

அனைத்து சமூகத்தினரையும் பிரதமர் சரிசமமாக நடத்துவது அவசியம். இந்திய சமூகத்திற்கு பிரதமர் உதவினால், சீன மற்றும் மலாய் சமூகத்தினர்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள். அவ்விரு சமூகத்தினரும் ஒருபோதும், அவருக்கான ஆதரவை மீட்டுக்கொள்ள மாட்டார்கள்.

வறுமையில் வாடும் இந்திய சமூகத்தை அதிலிருந்து மீட்கவும் சிறந்த கல்வி வாய்ப்பை வழங்கவும் METRICULATION-னில் இந்திய மாணவர்களுக்கு ஈராயிரத்து 500 இடங்களைப் பிரதமர் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதற்கு முன்பு அவ்விவகாரம் குறித்து தாம் எடுத்துரைத்த போதிலும் பிரதமரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்காததை சி.சிவராஜ் நேற்றைய மேலவையில் சுட்டிக்காட்டினார்.

2017ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு ஆயிரத்து 600 இடங்களை வழங்கியிருந்த அப்போதைய பிரதமர் டத்துக் ஶ்ரீ நஜி துன் ராசாக் , 2018ஆம் ஆண்டில் ஈராயிரத்து 200 இடங்களை வழங்கவும் இணக்கம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அவருக்கு பிந்தைய ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை ஈராயிரத்திற்கு குறைவாக உள்ளது. கடந்தாண்டு மிக மிக குறைவான இடங்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மலாய் அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடங்களே ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், சீன மாணவர்களுக்கு 5.4 விழுக்காடு இடங்கள் வழங்கப்படும் வேளை, எஞ்சிய இடங்களே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக, சி.சிவராஜ் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்