இந்திய சமூகத்திற்கு BLUEPRINT திட்டம் தேவை

கோலாலம்பூர், மார்ச் 19 –

மலேசியாவின் 67 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் தாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகளுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்தினால் எவ்வித கொள்கைத்திட்டமும் வகுக்கப்படாமல் பல்வேறு சிரமங்களையும், சவால்களையும் மலேசிய இந்திய சமூகம் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கிய இந்தியர்களுக்கு சமூகவியல் பொருளாதார உயர்விற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், BLUEPRINT திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் ர்.ஏ லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலவைக்கூட்டத்தில் தமது வாதத்தை முன்வைத்த டாக்டர் லிங்கேஸ்வரன், தேசிய நீரோடையில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் விடுபட்ட ஒரு சமூகமாக இந்தியர்கள் உள்ளனர் என்பதை மிகத்துல்லியமாக சுட்டிக்காடினார்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை வழிநடத்திய முந்தைய அரசாங்கம், இந்தியர்களின் நலன் சார்ந்த அம்சங்களில் ஆதீத அக்கறையை கொண்டிருக்காததால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாக, பொருளியல் வளர்ச்சியில் விடுபட்டுள்ளனர். .

இந்நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் இந்தியர்களின் 80 விழுக்காடு வாக்குகளை பெறுவதில் வெற்றிக்கண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார விடியலுக்கு BLUEPRINT போன்ற செயலாக்க பெரும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

இந்திய சமுதாயத்தின் சமூகவியல் பொருளாதார மேன்மைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், BLUEPRINT திட்டத்தை கொண்டு வருவாரேயானால், அதனை செயல்வடிவில் கொணர்வதற்கான உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கு இந்திய சமுதாயத்தை சேர்ந்த தொழில் நிபுணர்களும், நிறுவனத்துறையினரும் உதவுவார்கள் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் தமது வாதத்தில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்