உணவு விநியோகிப்பாளரை மோதி தள்ளிய நபர் அடித்துக்கொல்லப்பட்டார்

உணவு விநியோகிப்பாளர் ஒருவரை மோதி தள்ளிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிக்க முற்பட்ட காரோட்டியை காரிலிருந்து வெளியே இழுத்த பொது மக்கள், அவரின் இரு கைகளையும் கட்டிப்போட்டு சரமாரியாக அடித்ததில் அந்த காரோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று இரவு 9.20 மணியளவில் காஜாங், தாமான் பெலாங்கி டுவா என்ற இடத்தில் நிகழ்ந்தது. புரோட்டோன் சாகா கார் உரிமையாளரான 42 வயது நபர், கைகள் கட்டப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்டு, அவரின் உடல் சாலையோரத்தில் தூக்கி எறியப்பட்டது. அவரின் உடலை மருத்துவ அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜெய்த் ஹாசன் தெரிவித்தார்.

அந்த காரோட்டி தப்பிக்க முற்பட்ட போது, அவரின் கார், ஒரு வீட்டின் வேலியை மோதி தடப்புரண்டது. . அப்போது அந்த காரை நோக்கிய ஓடிய பொது மக்கள், அந்த நபரை காரிலிருந்து வெளியே இழுத்து வந்து, இரு கைகளை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் தகவல் கிடைத்து அவ்விடத்திற்கு விரைவதற்குள் இந்த தாக்குதலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தந்த தகவலை அடிப்படையாக கொண்டு செமிஞ்சே மற்றும் பெரானாங் ஆகிய பகுதிகளில் போலீசார் விடிய விடிய நடத்திய தேடுதல் வேட்டையில் 22 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து நபர்களை கைது செய்துள்ளதாக ஏசிபி முகமது ஜெய்த் ஹாசன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்