உலுதிராம் போலீஸ் நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஆசாமி, Jemaah Islamia பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவன்

ஜொகூர் பாரு, மே 17-

ஜோகூர், உலுதிராம் போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்திய சந்தேகப் பேர்வழி, Jemaah Islamia பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவன் என்று நம்பப்படுவதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டான் ஸ்ரீ ரசாருதீன், இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் 19 க்கும் 62 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழியின் குடும்ப உறுப்பினர்கள் ஆவர் என்று ஐஜிபி விளக்கினார்.

இன்று அதிகாலை 2.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் JI ( ஜே.ஐ.) எனப்படும் Jemaah Islamia பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்த 22 வயது சந்தேகப் பேர்வழி, உலு திராம் போலீஸ் நிலையத்தின் பின்புறமாக உள்ளே நுழைந்து இரண்டு போலீஸ்காரர்களை தாக்கியதுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளான். இதில் அந்த சந்தேகப் பேர்வழி, மற்றும் இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதாக டான் ஸ்ரீ ரசாருதீன் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, அதிகாலை 2.30 மணியளவில் வயது குறைந்த இரண்டு இளைஞர்களும், 22 மற்றும் 21 வயதுடைய இரண்டு பெண்களும் போலீஸ் நிலையத்திற்கு வந்ததாக டான் ஸ்ரீ ரசாருதீன் குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மானபங்கம் தொடர்பான புகார் தொடர்பில் அதிகாரிகளிடம் ஆலோசனை பெறுவதற்கு அவர்கள் வந்திருந்தனர்.

அந்த சமயத்தில் போலீஸ் நிலையத்தின் பின்பறமாக அந்த ஆசாமி நுழைந்துள்ளான். சத்தம் கேட்டு, போலீஸ்காரர் என்ன, ஏது என்று பார்ப்பதற்கு பின்புறம் சென்ற போது பாராங்கை ஆயுதமாக கொண்ட அந்த ஆசாமி, போலீஸ்காரரை தாக்கியிருக்கிறான். பின்னர் அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்துக் கொண்டு மற்றொரு போலீஸ்காரரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்திய போது அந்த போலீஸ்காரர் உயிரிழந்தார். பின்னர் அந்த ஆசாமி மற்ற போலீஸ்காரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டான் ஸ்ரீ ரசாருதீன் விளக்கினார்.

இதில் புகார் கொடுக்க வந்த இரு நபர்களையும் தாங்கள் கைது செய்து இருப்பதாக ஐஜிபி தெரிவித்தார். காரணம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து ஆலோசனை பெறுவதற்கு அந்த அதிகாலை நேரத்தில் அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட சந்தேகப் பேர்வழியின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, Al- Quran வாக்கியத்தைக் கொண்ட ஸ்டீக்கர்கள் நிறைய இடத்தில் ஒட்டப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர், Jemaah Islamia பயங்கரவாதி என்பது எங்களுக்கு தெரியவந்துள்ளது என்று டான் ஸ்ரீ ரசாருதீன் தெரிவித்தார்.

இது நன்கு திட்டமிட்ட தாக்குதலாகும். காரணம், போலீஸ்காரரை அந்த சந்தேகப் பேர்வழி தாக்கும் போது தகரம், துணி, காகிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய தற்காப்பு ஆடையை அவன் அணிந்துள்ளான் என்று ஐஜிபி மேலும் விளக்கினார்.

துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்காக அந்த நபர் உலு திராம் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து இருக்கக்கூடும் என்று தாங்கள் சந்தேகப்படுவதாகவும், அவனது உண்மையான நோக்கம் இன்னும் தெரியவில்லை என்றும் டான் ஸ்ரீ ரசாருதீன் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் ஜோகூர் மாநிலத்தில் Jemaah Islamia உறுப்பினர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு விசாரணை செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்