எஸ்.பி.ஆர்.எம் வளையத்திற்குள் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் மணிசேகர் சீரங்கன்

சிலாங்கூர், சுங்கைபூலோ ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளியின் அரசு மானிய நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக அதன் முன்னாள் மேலாளர் வாரியத் தலைவர் முனுசாமி கோபால் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் செந்திநாதன் ஆகியோர் விவகாரத்தில் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான பாலர் பள்ளி மற்றும் பள்ளி நிர்வாகப் பிரிவின் உதவி இயக்குநர் மணிசேகர் சீரங்கன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் வளையத்திறகுள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் பழங்கால தமிழ்ப்பள்ளியான சுங்கைப்பூலோ ரப்பர் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் வீற்றிருக்கும் ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள 6 ஏக்கர் நிலம் தொடர்பாக நேற்று நடைபெற்ற விளக்கமளிப்புக்கூட்டத்தில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க விவகாரம், பள்ளி மேலாளர் வாரியம் போன்ற பெற்றோர் சார்ந்த நடவடிக்கைகளில் தனது அதிகாரத்தை மணிசேகர் தவறாக பயன்படுத்தியிருப்பதாக பெற்றோர்கள் கடுமையாக குற்றஞ்சாட்டினர்.

பள்ளி பெற்றோர்களுக்கான இந்த விளக்கமளிப்புக்கூட்டம், ஆர்.ஆர்.ஐ. ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4 மணியளவில் சுங்கை பூலோ, Auditorium LGM மண்டபத்தில் நடைபெற்றது.

அரங்கம் நிறைந்த நிலையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 6 ஏக்கர் நிலம் தொடர்பாக உண்மை நிலவரங்கள் வழங்கப்பட்டதுடன் பள்ளி விவகாரத்தில் அழையா விருந்தாளியாக நுழைந்துக்கொண்டு, குடித்தனம் செய்து கொண்டு இருப்பதாக கல்வி அதிகாரி மணிசேகரை பெற்றோர்கள் கடுமையாக சாடினர்.

குறிப்பாக, கோவிட் 19 காலத்தில் பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்ததைப் போல ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு மற்றும் பள்ளியின் பாலர் பள்ளி நிர்வாகத்தை தனது பெயரில் உள்ள சொந்த கம்பெனிக்கு மாற்றிக்கொண்டது போன்ற போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள முன்னாள் வாரியத் தலைவர் முனுசாமி கோபாலையும், பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில் நாதனையும் பள்ளி மேலாளர் வாரியத்திற்குள் மீண்டும் கொண்டு வருவதில் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் மணிசேகர் சீரங்கன் பிடிவாதமாக இருப்பதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.

பள்ளிக்கு மாற்று இடமாக வியூகம் நிறைந்த பகுதியில் 6 ஏக்கர் வழங்கப்பட்டு நிலையில் அது தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு பள்ளியின் மேலாளர் வாரியம் முடக்கப்பட்டதற்கு மணிசேகர் முக்கிய காரணமாகும் என்று பெற்றோர்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பள்ளியின் பாலர் பள்ளி நிர்வாகத்தை தனது சொந்தப் பெயருக்கு மாற்றிக்கொண்டு , மித்ராவிடமிருந்து மானியம் பெற்று, முறைகேடு புரிந்துள்ளதாக கூறப்படும் முன்னாள் மேலாளர் வாரியத் தலைவர் முனுசாமிக்கும், ஒரு கல்வி அதிகாரியான மணிசேகருக்கும் என்ன தொடர்பு? அவரை மீண்டும் மேலாளர் வாரியத்திற்கு கொண்டு வருவதில் மணிசேகர் ஆர்வம் காட்டுவது ஏன்? இதில் மணிசேகர் உடந்தையாக இருப்பது ஏன்? என்பது பெற்றோர்களின் ஆதங்கமாகும்.

பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள 6 ஏக்கர் நிலத்தை வேண்டாம் என்று கூறி, கல்வி இலாகாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படும் முன்னாள் மேலாளர வாரியத் தலைவர் முனுசாமியின் நடவடிக்கைக்கு துணை நிற்கும் கல்வி அதிகாரி மணிசேகர் விவகாரம், தற்போது எஸ்.பி.ஆர்.எம் வளையத்திற்குள் இருப்பதால், அவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை கூட்டத்தில் பேசுவதற்கு பெற்றோர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்