5 முறை சாம்பியன் – 12 முறை பிளே ஆஃப் – 3ஆவது முறையாக பிளே ஆஃப் இல்லாமல் பரிதாபமாக வெளியேறிய சிஎஸ்கே

இந்தியா, மே 20-

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி வரை போராடி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற நிலையில், 4ஆவது இடத்திற்கான ரேஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான இந்தப் போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். 3 ஓவர்களில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு பிறகு போட்டி தொடங்கப்பட்டது. எனினும், ஓவர்கள் குறைக்கப்படவில்லை. இதையடுத்து பேட்டிங் செய்த விராட் கோலி 47 ரன்களில் வெளியேற, ஃபாப் டூப்ளெசிஸ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஜத் படிதார் 41 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 14 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக கேமரூன் க்ரீன் அதிரடியாக விளையாடி 38 ரன்கள் எடுத்துக் கொடுக்கவே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 201 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் நின்று விளையாடி ரன்கள் குவித்தனர். எனினும், ரஹானே 33 ரன்களில் வெளியேற, ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்த நிலையில் 61 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஷிவம் துபே 7 ரன்களில் வெளியேற, மிட்செல் சாண்ட்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்தப் போட்டியில் 15 ஆவது ஓவரில் தோனி களமிறங்கினார்.

அப்போது சிஎஸ்கே 15 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்திருந்தது. மேலும், 30 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் ஜடேஜா மற்றும் தோனி இருவரும் பேட்டிங் செய்தனர். இதில், 16ஆவது ஓவரில் 9 ரன்களும், 17ஆவது ஓவரில் 13 ரன்களும் எடுக்கப்பட்டது.

கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில் 18 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், யாஷ் தயாள் வீசிய முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்த நிலையில், 2ஆவது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதோடு 3ஆவது முறையாக சிஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. சிஎஸ்கே விளையாடிய 15 சீசன்களில் (இந்த சீசன் உள்பட), 12 சீசன்கள் பிளே ஆஃப் சென்றது. இதில், 5 முறை சாம்பியனானது. மேலும், 5 முறை 2ஆம் இடம் பிடித்தது. ஒரு முறை அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியது. அதன் பிறகு 3, 7, 9 ஆகிய இடங்கள் பிடித்திருந்தது. நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக 5ஆவது இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்