கடற்படை பயிற்சி வீரர் சூசைமாணிக்கம் மரணம் நீதி கேட்டு தந்தை ஜோசப் போராட்டம்

கோலாலம்பூர், மார்ச் 7 –

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பேரா, லூமுட் , அரச மலேசிய கடற்படைத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது உயிரிழந்த ஒரு பயிற்சி வீரரான தமது மகன் J. சூசைமாணிக்கத்தின் மரணத்திற்கு காரணமானவர்கள், இதுவரையில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாதது தொடர்பில் நீதி கோருகிறார் தந்தை ஸ். ஜோசப்.

பயிற்சி வீரரான 27 வயது சூசை மாணிக்கம் மரணத்தில் அலட்சிப்போக்கும், கவனக்குறைவும் நிகழ்ந்து இருப்பதாக கூறி, அரசாங்கம் மற்றும் இதர 14 தரப்பினருக்கு எதிராக தந்தை ஜோசப் தொடுத்துள்ள சிவில் வழக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

கூட்டரசு வழக்கறிஞர் அப்துல் ஹக்கிம் காரெம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சூசை மாணிக்கத்தின் 71 வயது தந்தை ஜோசப், தமது மகன் கடலில் நடைபெற்ற பயிற்சியின் போது உயிரிழந்ததாக தெரிவித்தார்.

தமது மகன் இறந்த மறுநாளான 2018 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி தாம் போலீசில் புகார் செய்ததாகவும், மூச்சுத்திணறலினால் அவதியுற்ற தமது மகனுக்கு முதல் உதவி சிகிச்சையை அளிக்க அந்த கடற்படைத் தளத்தின் பணியாளர்கள் தவறிவிட்டனர் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டதாக ஜோசப் தெரிவித்தார்.

தமது மகன் கடற்படை பயிற்சிக்கு செல்லும் போது ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருந்ததாகவும், பயிற்சிக்கு பின்னரே அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக தந்தை ஜோசப் தமது சாட்சியத்தில் விவரித்தார்.

தமது மகனின் இறப்புக்கு காரணமானவர்கள் இதுவரையில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாதது தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக என்று தந்தை ஜோசப் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

இவ்வழக்கில் சூசைமாணிக்கம் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர்கள் சைட் மாலெக் மற்றும் லாதேபா கோயா ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்