கணவன், மனைவிக்கு ஒரு வாரகாலம் தடுப்புக்காவல்

கோலாலம்பூர், மார்ச் 30-

மலேசியாவில் நுழைந்துள்ள ஓர் இஸ்ரேலிய ஆடவருக்கு 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் மலேசியப் பிரஜைகளான கணவன், மனைவிக்கு போலீசார், ஒரு வார கால தடுப்புக்காவல் அனுமதியை பெற்றுள்ளனர்.

நேற்று இரவு 7.15 மணியளவில் கோல சிலாங்கூரில் ரமலான் சந்தையில் பிடிபட்ட 42 வயதுடைய ஆடவரையும், 40 வயதுடைய அவரின் மனைவியையும் விசாரணை செய்வதற்கு ஏதுவாக அவ்விருவரையும் 1960 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான அனுமதியை போலீசார், நீதிமன்றத்தில் பெற்றுள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோலசிலாங்கூரில் உள்ள அந்த தம்பதியரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட புக்கிட் அமான் போலீசார், அவர்களுக்கு சொந்தமான ஹொண்டா ஜேஸ் ரக காரில் ஒரு துப்பாக்கியை போலீசார் மீட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டு கடப்பிதழில் மலேசியாவிற்குள் நுழைந்துள்ள அந்த இஸ்ரேலிய ஆடவரிடம் தாய்லாந்தில் வாங்கியதாக கூறப்படும் ஆறு துப்பாக்கிகளையும், 200 தோட்டாக்களையும் அந்த தம்பதியர் ஒப்படைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

36 வயதுடைய அந்த இஸ்ரேலிய ஆடவர், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கடந்த புதன்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் பிடிபட்டதாக டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் நேற்று செய்தியாளகளிடம் தெரிவித்து இருந்தார்.

அந்த ஆடவர் இஸ்ரேலிய நாட்டின் உளவுத்துறையை சேர்ந்தவரா? என்பது குறித்து தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டு இருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்