காதலியை 23 ஆவது மாடியிலிருந்து தள்ளிய நாதன், மனநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 19-

ஒரு தாய்லாந்து பிரஜையான தனது காதலியை ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 23 ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரு லோரி ஓட்டுநரான நாதன் என்பவரை மனநிலை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பேரா, உலு கிந்தா, தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பஹாகியா மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நாதனின் மனநிலையை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதிப்பதாக மஜிஸ்ட்ரெட் முகமது ரெட்சா அசார் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய நாதன், தலையில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பில் அவரிடமிருந்து எந்தவொரு உத்தரவையும் பெற முடியவில்லை. எனவே அவரின் மனநிலையை சோதனை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாதனின் வழக்கறிஞர் சிவநந்தன் ராகவன் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

நாதன் ஆரோக்கியமான நிலையில் உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்படுமானால், அவருக்கு எதிரான கொலை வழக்கை தொடர்வதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்று வழக்கறிஞர் சிவநந்தன் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பு எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

37 வயதுடைய V. நாதன், கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 10.02 மணியளவில் ஷா ஆலம், செக்சேன் U13, செத்தியா ஆலாமில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 23 ஆவது மாடியிலிருந்து தனது காதலி 32 வயதுடைய மாவிகா லும்யாய் என்பவரை கீழே தள்ளி கொன்றதாக கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் நாதன் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்