விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும்

கோலாலம்பூர், ஏப்ரல் 19-

தமக்கு எதிரான சிறைத் தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட நிலையில் அந்த சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, வழக்கு தொடுத்துள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ரகசியமாக நடைபெறக்கூடாது. மாறாக, வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று இரண்டு அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு விசாரணை ரகசியமாக நடத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை. இது பொது மக்கள் நலன் சார்ந்த ஒரு வழக்கு என்பதால் அந்த வழக்கை செவிமடுப்பதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் சீர்திருத்த இயக்கமான பெர்சிஹ் மற்றும் சி.ஐ.ஜெ எனப்படும் சுயேட்சை பத்திரிகையாளர்கள் மையம் கேட்டுக்கொண்டுள்ளன.

நஜீப் முக்கிய பிரமுகர் மட்டுமல்ல. மலேசியாவை ஒன்பது ஆண்டுகள் வழிநடத்திய ஒரு பிரதமர். அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு மக்கள் அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

அப்படி பொது மக்கள் அறிந்து கொள்வதற்கு இவ்வழக்கு பொதுவில் நடத்தப்படாமல் மிக ரகசியமாக நடத்தப்படுவதற்கு முடிவு எடுக்கப்படுமானால் அரசாங்கம் இரட்டைப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படும் நிலை ஏற்படும்.

அத்துடன் அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடலாம் என்று அந்த இரண்டு அரசு சாரா அமைப்புகளும் நினைவுறுத்தியுள்ளன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்