குடியுரிமைக்கான விண்ணப்பம் 3 முறை நிராகரிப்பு, உள்துறை அமைச்சரின் உதவியை நாடும் 4 இந்திய சகோதரிகள்

பேராக், மார்ச் 27-

பேரா மாநிலத்தை சேர்ந்த 4 இந்திய சகோதரிகள், மலேசியக் குடியுரிமைக்கு மூன்று முறை விண்ணப்பித்தும் அவர்களது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது வேறு வழியில்லாமல் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைப்புடின் நசுட்டின் இஸ்மாயில் – லின் உதவியை நாடியுள்ளனர்.

இரண்டு இரட்டை உடன் பிறப்புகளான 26 வயது என் தாட்ச்சாயினி மற்றும் தன ஸ்ரீ, 24 வயது வேதிய ஸ்ரீ, 22 வயது சுகாசினி ஆகிய 4 சகோதரிகள் செய்திருந்த மனுக்களை, தேசிய பதிவகத் துறை, உரிய காரணங்களை வழங்காமலேயே நிராகரித்துள்ளதாக, DHRRA Malaysia அமைப்பின் தலைவர் எம் சரவணன் , மலேசியாகினி இணைய செய்தி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

இயல்பாகவே குடியுரிமையை வழங்கும் கூட்டரசு அரசியலைமைப்பின் 19ஆவது பிரிவின் கீழ், அந்நால்வரும் செய்திருந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ள தேசிய பதிவகத் துறை மறுக்கின்றது. இதுவரையில் அந்நால்வரும் கடந்த 2009, 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் விண்ணப்பம் செய்திருந்தும் எவ்வித பலனும் இல்லை.

அதிலும், கடந்த 2014-ஆம் ஆண்டில் செய்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தகவல் 7 ஆண்டுகளுக்கு பிறகு 2021ஆம் ஆண்டில் தான் அவர்களுக்கு தெரிய வந்ததாக எம் சரவணன் கூறினார்.

அந்நான்கு சகோதரிகளின் தந்தையான நடுன்சீலன் கிருஷ்ணன் மலேசியாவைச் சேர்ந்தவர். 1997ஆம் ஆண்டு சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணை அவர் பாரம்பரிய முறையில் திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு அப்போது வயது குறைவு என்பதால், சட்டப்படி அந்த திருமணம் பதிவு செய்யப்படவில்லை. சுகாசினி பிறந்த பிறகு அவரது தாயார் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை தேடியும் இதுநாள் வரையில் கிடைக்கவில்லை என எம் சரவணன் கூறினார்.

மேலும், அந்த 4 சகோதரிகளின் பிறப்பு சான்றிதழில், சுகாசினி-யைத் தவிர இதர மூவரது குடியுரிமை குறிப்பிடப்படவில்லை. 2009ஆம் ஆண்டில் தமது 4 பிள்ளைகளும் நாடற்றவர்கள் என்பது நடுன்சீலன்-னுக்கு தெரிய வந்தது.மலேசிய குடியுரிமை இல்லாததால், தனது பெண் பிள்ளைகளுக்கு கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு முதலானவை கிடைக்காததோடு திருமணமும் ஆகாதது குறித்து நடுன்சீலன் கவலை தெரிவித்ததாக அவர் குறிபிட்டார்.

15A பிரிவின் கீழ், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியை அந்நால்வரும் இழந்துவிட்ட நிலையில், 19 பிரிவான சிறப்பு நிலையின் கீழ் மட்டுமே விண்ணபிக்க முடியும். ஆனால், தேசிய பதிவகத்துறை அதற்கான மனுவை வழங்க மறுப்பதால், உள்துறை அமைச்சர் இதில் தலையிட்டு உதவ வேண்டுமென எம் சரவணன் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்