கேமரன் மலையில் அவிழ்க்கப்படாத ஒரு முடிச்சு

நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் கேமரன் மலையும் ஒன்று. மனத்திற்கினிய, மனம் குளிரும் பல நினைவலைகளைக் காலத்திற்கும் அழியாமல் நிலையாகக் கொண்டிருக்கும். ஆனால், அங்கும் அவிழ்க்க முடியாத, மர்ம முடிச்சு ஒன்று இருக்கிறது என்றால் நம்புவீர்களா ?

ஆம், 1967இல் அமெரிக்க வியாபாரியான 61 வயது ஜிம் தாம்சன் என்பவர் காணாமல் போன மர்மம் இன்று வரை நீடிக்கிறது. அந்தச் சம்பவம் மலேசியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பூகம்பமாய் வெடித்தது.

இன்று வரை, ஜிம் தாம்சன் என்ன ஆனார் ? எங்குப் போனார் ? அல்லது உயிரோடுதான் இருக்கிறாரா என்ற கேள்விக் கணைகள் தலையின்மீது தொங்கும் கத்திகளாக இருக்கின்றன.

வெளிநாடுகள் வரை பூகம்பமாக வெடிக்கும் அளவுக்கு யார் அந்த ஜிம் தாம்சன் ? கேமரன் மலையில் நடந்தது என்ன ? அவர் எங்குப் போனார் என்று தெரியாத அளவுக்கு மர்ம முடிச்சு ஒன்று அங்குக் காத்திருக்கிறது.

==== யார் இந்த ஜிம் தாம்சன் ? ====

அமெரிக்காவில் டெலவெயர் என்ற சிறு மாநிலத்தில், கிரீன் வேல்லியில் பிறந்தவர்தான் ஜிம் தாம்சன். ஹாரிசன் வில்சன் தாம்சன் என்ற இயற்பெயர் கொண்ட ஜிம் தாம்சன் தாய்லாந்தில் தமது பட்டு வியாபாரத்தைத் தொடங்கும் முன்னர் அமெரிக்க ஆயுதப்படையில் பணி புரிந்திருக்கிறார்.

இவர் பட்டு வியாபாரத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். இவர் ஒரு சிறந்த தொழில்முனைவர் ஆவார். தமது பட்டுத் துணிகள் தரம் உயர்ந்தவை என்பதாலேயே புகழ் பெற்று வந்தார். இவரின் பெரும் முயற்சியால் மந்த நிலையில் இருந்து வந்த பட்டுத் தொழில்துறைக்கு மறுமலர்ச்சி கிடைத்தது. பேங்காக்கில் அவரது வீடு இன்னமும் சுற்றுப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

ஜிம் தாம்சன் தொழிலதிபர் மட்டுமன்று. இவர் சி.ஐ.ஏ எனப்படும் மத்திய உளவுத் துறையிலும் பணி புரிந்தவர் ஆவார்.

கடந்த 1967ஆம் ஆண்டு ஜிம் தாம்சன் தாய்லாந்தில் இருந்து மலேசியாவுக்குத் தமது 3 நண்பர்களுடன் சுற்றுலா வந்தார். கேமரன் மலையைச் சுற்றி பார்க்க வந்தபோது, இன்று வரை செயல்பட்டு வரும் தானா ராத்தாவில் உள்ள மூன்லைட் காட்டேஜ்-இல் தங்கினார்.

அவர் காணாமல் போன நாள், ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆகும். கிறிஸ்துவர் என்பதால், ஜிம் தாம்சன் தாம் தங்கி இருந்த கோட்டேஜ் வீட்டிற்கு அருகில் உள்ள ஆல் சோல்ஸ் தேவாலயத்திற்குச் சென்றுள்ளார்.

பின்னர், காற்று வாங்க சற்று நேரம் வெளியில் சென்று வருவதாகத் தமது நண்பர்களிடம் கூறி விட்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர், ஜிம் தாம்சன் திரும்பவே இல்லை.

பதறிப் போன நண்பர்கள் ஜிம் தான்சனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கேமரன் மலையின் காட்டுப் பாதைகளை நன்கு அறிந்து வைத்திருந்த பூர்வக்குடிமக்கள், தன்னார்வலர்கள், மோப்ப நாய் பிரிவினர் என 500க்கும் மேற்பட்டவர்கள் ஜிம் தான்சனைத் தேடுவதில் களம் இறங்கினர், 11 நாள்கள் தொடர்ந்து தேடியும் ஜிம் தாம்சன் கிடைக்காத நிலையில், அவர் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்ற கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.

ஜிம் தாம்சன் மாயமானது குறித்து மக்கள் பல்வேறான ஊகங்களை முன்வைத்து கருத்துரைக்க தொடங்கினர். சில துப்பறிவாளர்களும் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி தீர்வுக் காணவும் முற்பட்டனர். ஆனாலும், நடக்கவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டு, ஜிம் தான்சன் காணாமல் போன விவகாரம் குறித்து லீவெல்லின் டோல்மின் என்ற தேடல் – மீட்பு வல்லுநர் ஓர் அறிக்கையை வெளியிடிருந்தார். ஜிம் தாம்சனுக்கு என்ன நடந்திருக்கலாம் என்பது குறித்து தமது கருத்தை அதில் குறிப்பிட்டிருந்தார்.

வியட்நாம் போரின்போது, கம்யூனிஸ்டுவாதிகளுக்கு ஜிம் தாம்சன் கருணை காட்டி கொல்லாமல் இருந்திருக்கிறார். அதன் காரணமாக ஜிம் தாம்சன் சேவையாற்றிய சி.ஐ.ஏ.-வினால் கொல்லப்பட்டார் என ஒரு முக்கிய நபர் தகவல் அளித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

வியட்நாம் போரின்போது, சி.ஐ.ஏ.வின் சில கட்டளைகளை ஜிம் தாம்சன் புறந்தள்ளி இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் அதில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஹிம் ஒரு சிறந்த உளவாளியாகச் சேவையாற்றியுள்ளார். இதன் காரணமாகவே, ஜிம் தான்சமைத் தேடுவதற்கு அமெரிக்கா ஒரு ஹெலிகோப்டரை இரவல் கொடுத்து உதவி இருக்கிறது.

ஜிம் தாம்சன் காணாமல் போன இடத்தில், மகிழுந்தில் சென்றிருக்கலாம் எனும் வாதத்தை டோல்மின் ஏற்க மறுக்கிறார். காரணம், அந்தக் காலக்கட்டத்தில், கேமரன் மலையில் மகிழுந்துகள் காணப்படுவது மிக மிக அரிது. ஒருவேளை, மகிழுந்து பயன்படுத்தப்பட்டிருக்குமானால் நிச்சயம் அதன் சத்தம் மற்றவர்களுக்கும் கேட்டிருக்கும்.

மற்றொரு கருத்தாக ஜிம் தாம்சனைத் தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அப்போதைய காலக்கட்டத்தில், இரண்டாம் ஊரடங்கு முடிவுற்றிருந்த நேரம் அது. அந்நிலையில், தீவிரவாதிகள் காட்டிற்குள் மறைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜிம் தான்சன் காணாமல் போன விவகாரம் ஓர் ஆவணப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. ‘வூ கில்ட் ஜிம் தாம்சன்’ எனும் தலைப்பில் வெளிவந்த அந்த ஆவணப்படத்தைப் பேரி புரோமான் தயாரித்திருந்தார். அந்த ஆவணப்படத்தின் தகவலின்படி, ஜிம் தாம்சன் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக ஜிம்மின் நண்பர் ஒருவர் இறக்கும் தருவாயில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருந்தார்.

இதைத் தவிர, ஜிம் தாம்சனின் மரணத்திற்கு அவரது காதலியுடன் ஏற்பட்ட மனக் கசப்பே காரணமாகும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ஆனால், அதனை உறுதிபடுத்துவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று டோல்மின் கூறுகிறார்.

தொடர்ந்து, ஜிம் தாம்சன் காட்டில் உலாவ சென்றபோது புலியினால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற ஓர் ஊகமும் நிலவுகிறது. இது கிட்டத்தட்ட ஏற்றுக் கொள்ளக்கூடிய தகவலாக இருக்கிறது. காரணம், ஜிம் தாம்சான் காணாமல் போவதற்கு முந்தைய நாள் காட்டைச் சுற்றி பார்க்க தமது நண்பர் ஒருவரோடு சென்றிருக்கிறார். அப்போதும் அவர்கள் திரும்பி வர வழி தெரியாமல் சில மணி நேரங்கள் காட்டிலேயே தடுமாறி இருக்கிறார்கள்.

மேலும், ஜிம் தாம்சன் அந்த மலைப் பிரதேசத்தில் சென்றிருந்தபோது, அடர்ந்த காடுகள் நிறைந்த பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம். அதனால், அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காரணம், வயதான ஜிம் தாம்சனுக்குச் சில உடல்நலப் பிரச்சனைகளும் இருந்துள்ளன. ஆகையால், அவர் பலவீனமாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

ஜிம் தாம்சன் காணாமல் போனதாகக் கூறப்படும் காடு மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். அவ்வாறான இடத்தில், ஜிம்மைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமன்று. அதேவேளையில், புலி தாக்கி இறந்திருக்கக்கூடும் என்ற தகவலை வலுப்படுத்துவதற்கு எந்த ஆதாரமும் தடயமும் இல்லை.

ஓர் ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்ட கேமரன் மலையில் ஓர் ஆங்கிலேயர் காணாமல் போனது பெரும் கேள்விக் குறியாக விளங்கியதால், காணாமல் போன ஜிம் தாம்சனின் நினைவாக கேமரன் மலையில் ஜிம் தான்சன் டிரேல் என்று ஒரு சாலைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஜிம் தான்சன் காணாமல் போவதற்கு முன்னர் அவர் தங்கி இருந்த மூன் லைட் கோட்டேஜ் இன்று ஜிம் தாம்சன் கோட்டேஜ் ஆக பெயர் மாற்றம் கண்டுள்ளது.

ஜிம் தாம்சனின் மரணம், 1974ஆம் ஆண்டு தாய்லாந்து தலைநகர் பேங்காக் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், பேங்காக்கில் உள்ள அவரின் மாளிகை ஒரு நினைவார்ந்த கூடமாக மாற்றப்பட்டு அவரின் தொழிலுக்குக் காரணமாக இருந்த உயர்தர பட்டுத் துணிகள் கண்காட்சிப் பொருள்களாகப் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்