மறக்கப்பட்ட “பாப்பான்” நகர்



1980 ஆம் ஆண்டுகளில் Asia Rare Earth Sdn. நிறுவனம் சம்பந்தப்பட்ட கதிரியக்க கழிவு மாசுப்பாடு மிரட்டல் காரணமாக நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அக்காலக்கட்டத்தில் ‘யட்ரியம்’ என்ற அரிய கனிம வளத்தை தோண்டும் நடவடிக்கையில் Asia Rare Earth Sdn. நிறுவனம் ஈடுப்படத் தொடங்கியது.

‘யட்ரியம்’ என்பது கதிரியக்க தன்மையிலான கனிம வளம் என்பதால் மக்களின் உடல் சுகாதார பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கத் தொடங்கியது. அதன் இரசாயன வாடை, வெளியேற்றப்படும் கழிவுகள், அத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாப்பான் நகர், மக்களை வெகுவாக பாதித்தது.

பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சுவாசிக்க மிக சிரமப்பட்ட காரணத்தினால் அந்நிறுவனத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டது பெரும் கவனம் ஈர்ப்பாக அமைந்தது.
Asia Rare Earth Sdn நிறுவனம், சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் பத்து காஜா, புக்கிட் மேராவில் வீற்றிருந்த போதிலும் இந்த கதிரியக்க இரசாயனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட முக்கிய ஊர்களில் பாப்பானும் ஒன்றாகும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொது அமைப்புகளும் கொடுத்த நெருக்குதலின் காரணமாக அன்றைய பிரதமர் துன் மகாதீர் முகமட் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சர்கள் இந்த தொழிற்சாலை நிர்மாணிப்பை இழுத்து மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இச்சம்பவத்தைப் பலர் மறந்தாலும் பாப்பார் நகர் இன்னமும் ஒரு வரலாற்றுப் பதிவை கொண்டுள்ளது.

பேரா மாநிலத்தில் பாப்பானைப் பற்றி மக்கள் அறிந்திருக்கவில்லை என்றாலும் அந்த சிற்றூர் வரலாற்று ரீதியாக பல்வேறு பொருள் பதித்த விஷங்களை தாங்கி நிற்கிறது.
ஈயச்சுரங்க நடவடிக்கைகளுக்கு நாட்டின் முன்னணி வளம் நிறைந்த இடமாக அன்றைய நாளில் வகைப்படுத்தப்பட்ட கிந்தா பள்ளத்தாக்கில் ஈப்போ வட்டாரத்துடன் ஒப்பீடுகையில் பாப்பான் நகரமே அதிக ஈய விளைச்சலை தந்த ஊராக விளங்கியது என்கிறார் பேரா மாநில மரபுடைமை சங்கத்தின் தலைவர் நோர் ஹிஷாம் சுல்கிப்ளி.

பாப்பான் நகர், ராஜா பிலா ஆட்சிக்காலத்துடன் நின்றுவிடவில்லை. மாறாக, அதன் வரலாறும் தொன்மையும் 19 ஆம் நூற்றாண்டில் 23 ஆவது பேரா சுல்தான் சுல்தான் ஜப்பார் சைபுடீன் முவாஸாம் ( 1857 – 1865 ) வரை கீர்த்திப் பெற்றதாகும்.

சுல்தான் ஜப்பார் சைபுடீன் காலத்தில் ஈயச்சுரங்கத்தின் முன்னணி நகராக பாப்பான் விளங்கிருக்கிறது. பின்னர், ராஜா பெண்டாஹரா இஸ்மாயில் காலத்திலும் தலை நிமிர்ந்து நின்றுள்ளது.

செல்வக் கொழிப்பும் மக்கள் நடமாட்டமும் பரபரப்பும் மிகுந்த ஒரு நகராக பேரா மாநிலத்தில் விளங்கிய பாப்பான் நகர், ஆங்கிலேய முதலாவது ரெசிடெண்ட் ஜேம்ஸ் பர்ச் பெர்ச் கொல்லப்பட்டது மற்றும் ராஜா பெண்டாஹரா இஸ்மாயில் ஜொகூர் மாநிலத்திற்கு கடத்தப்பட்டது ஆகியவற்றின் காரணமாக தனது செல்வ செழிப்பை இழந்து கைவிடப்பட்ட நிலையில் மறக்கப்பட்ட ஒரு நகரமாக மாறியது.

வரலாற்று ரீதியாக பாசீர் சாலாக் போன்று முன்னணி நகராக பிரபலமடைய வேண்டிய பாப்பான், புகழ் பெறாமலும் பின்னடைவை நோக்கியும் சென்றது ஒரு துரதிரஷ்டமே என்கிறார் கடந்த 1980 ஆம் ஆண்டு பாப்பானில் Asia Rare Earth Sdn. நிறுவனத்திற்கு எதிரான ஆர்பாட்டத்திற்கு தலைமையேற்றவரான 82 வயது லோவ் தோங் ஹீய்.

பாப்பான் நகர், தாம் பிறந்த ஊராக இருந்த போதிலும் வரலாற்று ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தம்முடன் இரண்டறக் கலந்த ஒன்றாகும்.

ஈயம் தோண்டும் நடவடிக்கையில் பாப்பான் உச்சத்தில் இருந்தபோது 1963 ஆம் ஆண்டு ஈயச்சுரங்கத்தில் வேலை செய்ய தொடங்கியதாக லோவ் கூறுகிறார்.

80 ஆம் ஆண்டுகளில் அந்த கதிரியக்க தொழிற்சாலை உருவாகுவதை பாப்பானில் பிறந்த தங்களால் அறவே ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அபாயம் நிறைந்த அத்தொழிற்சாலையின் வரவை தாங்கள் முழு வீச்சாக எதிர்த்ததாக லோவ் கூறுகிறார்.

எங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், கோலாலம்பூரில் உள்ள ஜப்பான் தூதரகம் வரை நடந்தது. எங்களின் ஆட்சேப நடவடிக்கையைப் பல தலைவர்கள் கண்டித்தனர். காரணம் அச்சமயத்தில் ஜப்பானுடன் இணைந்து மலேசியாவின் எடாரான் ஆடோமோபில் நிறுவனம் நாட்டின் தேசிய காரான புரோட்டோன் சாகா தயாரிப்பில் ஈடுப்பட்டு இருந்த நேரம் அது.

சம்பந்தப்பட்ட இரசாயன நிறுவனம், ஒரு ஜப்பானிய நிறுவனம் என்பதால் எங்கள் ஆர்ப்பாட்டத்தை ஜப்பானிய தூதரத்தை நோக்கி நகர்த்தினோம்.
இதில் உள்ளூர் தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களை கடிந்து கொண்டார்கள். எங்களை பொருத்தவரை எங்களின் ஆர்ப்பாட்டம் ஒரு மக்கள் பிரச்னையாக முன்வைத்தோமே தவிர, அரசியலை கலக்கவில்லை.

இதன் தொடர் விளைவாக 1987 ஆம் ஆண்டு அரசாங்கம் தொடங்கிய ஒப்பராசி லாலாங் நடவடிக்கையில் எங்களில் பலர் கைது செய்யப்பட்டனர் என்று லோவ் நினைவுக்கூர்ந்தார்.
பாப்பான் மக்களோடு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த மலேசிய மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் பினாங்கு வழக்கறிஞர் மீனாட்சி ராமனும் இந்த ஒப்பராசி லாலாங் நடவடிக்கையில் இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதுக்குறித்து கருத்துரைத்த மீனாட்சி ராமன், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை தொடங்கப்பட்டு அதிலிருந்து வெளியேறக்கூடிய கதிரியக்க கழிவுப் பொருட்கள் உயிருக்கு ஊறுவிளைவிக்கக்கூடியதாகும்.
குறிப்பாக, லுக்குமியா என்ற இரத்தப் புற்றுநோய் உட்பட பல அபாயகரமான நோய்களால் மக்கள் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருந்தது. இரண்டு வயது சிறார்களுக்கு புற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டது அதிர்ச்சியை தந்தது.
இதன் காரணமாகவே ரசாயன வெளியேற்றத்திற்கு காரணமான அந்த தொழிற்சாலைக்கு எதிராக பாப்பான் மக்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம். பூவியியல் பாதுகாக்கப்படுவதற்காக தாம் மேற்கொண்ட போராட்டத்தில் பாப்பான் விவகாரமே பெரியதாகும். இதன் காரணமாகவே 1987 ஆம் ஆண்டு ஓப்ஸ் லாலாங் நடவடிக்கையில் தமது 29 ஆவது வயதில் தாம் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாக மீனாட்சி ராமன் தெரிவித்தார்.
மக்கள் நடத்திய இந்த போராட்டம் தமக்கு இன்னமும் நினைவிருப்பதாக கூறுகிறார் லியோங் வாய் ஃபான். அப்போது தமக்கு 8 வயது என்ற போதிலும் மக்கள் நடத்திய போராட்டத்தினால் அன்றைய நாளில் பாப்பான் மக்களுக்கு வெற்றி கிடைத்தது என்கிறார் அந்த இளைஞர்.
தற்போது பழைய போர்க்கால கட்டடங்களை தாங்கிய நிலையில் ஒரு கௌபாய் நகரைப் போல் பாப்பான் காட்சி தந்தாலும் அதன் வரலாறு செழுமை நிறைந்ததாகும்.
1875ஆம் ஆண்டில் நடைபெற்ற பேரா போரில் பாப்பான் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 1941-இல் ஜப்பானியர்களால் ஈப்போ நகரம் குண்டு வீசி தாக்கப்பட்டதும் அங்குள்ள மக்கள் பாப்பான் நகரில் தஞ்சம் அடைந்தனர். ஜப்பானியர் காலத்தில் பாப்பான் ரகசியக் கும்பல்களின் உறைவிடமாக விளங்கியது.

அக்கால கட்டத்தில் சிபில் கார்த்திகேசு எனும் மலேசியத் தமிழ்ப்பெண்மணி ஜப்பானியருக்கு எதிராக மலேசியாவின் நட்புப் படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். அப்படையினருக்கு ரகசியமாக மருத்துவ உதவிகள் செய்தார்.
ஒரு தாதியான சிபில், தமது கணவருடன் ஈப்போவிலிருந்த இடம் பெயர்ந்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தார். இந்த பாப்பான் நகரிலேயே சொந்த கிளினிக்கை நிறுவினார். ஜப்பானியர்களை எதிர்த்துப் போராடிய போராளிகளுக்க ரகசியமாக சிகிச்கை அளித்து உதவியதன் காரணமாக ஜப்பானியர்களின் சித்ரவதைக்கு ஆளாகினார் சிபில் கார்த்திகேசு.
அவர் வாழ்ந்த வீடும், மருத்துவ கிளினிக்கிற்கும் இன்னமும் பாப்பான் நகரில் இருக்கின்றன. அந்த வீடு தற்போது ஓர் அருங்காட்சியகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பாப்பான் நகர், தன்னகத்து பெருமையை இழந்து விட்டது என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இந்த நகரின் பெருமையும், தொன்மையும் வருகின்ற தலைமுறையினர் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக லியோங் கூறுகிறார்.
ஈப்போ அல்லது பத்துகாஜாவிற்கு செல்கின்றவர்கள் தற்போது பாப்பார் நகரை சென்று பார்த்து வருகின்றன. பழங்கால கட்டடங்களே பாப்பான் நகரில் இருந்த போதிலும் ஒரு பெருமைக்குரிய நகரை சுற்றிப்பார்த்ததில் மனம் ஆறுதல் படுகிறது என்று பெரும்பாலானவகள் கருத்தெரிவித்துள்ளனர்.

127 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1896 ஆம் ஆண்டு ஒரு பரபரப்பான சூழலில் செயல்பட்ட நகரத்தின் தற்போதைய நிலையை பார்க்கும்போது அந்த வரலாற்றுப் பதிவுகளை ஓரளவு தேடிப் பார்த்து ஆராய வேண்டிய அவசியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திகிறது என்று கோலாலம்பூரிலிருந்து வந்திருந்த 41 வயது கே.மூர்த்தி தெரிவித்தார்.
பாப்பான் மரபுடைமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சியூ செங் லியோங் என்ற ஜெக்கி கூறுகையில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுப்பயணிகளையும் கவருவதற்கு ஊராட்சி மன்றம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் 19 தொற்றுப்பரவலுக்கு முன்பு இதற்கான முயற்சிகளும், முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது கிடப்பில் கிடக்கின்றன.
அந்த முயற்சிகளுக்கு மீண்டும் பூத்துயிர் அளிக்கப்படுமானால் பாப்பான் நகர், மலேசிய சுற்றுலாத்தளங்களின் வரைப்படத்தில் தனக்கே உரிய சரித்திரத்தை தாங்கி நிற்கும் என்று ஜெக்கி நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்