ரவாங் விரைவுச் சாலையின் கீழ் அழிந்து வரும் கியாம் கன்சிங் மரம்!

மேலே விரைவுச் சாலை… கீழே அழிந்து வரும் கியாம் கன்சிங் மரம்

மலேசியாவில் பொதுப் பணித் துறையும் போக்குவரத்துத் துறையும் இணைந்து பணியாற்றுவது சாலைகள் விவகாரத்தில்தான். வழக்கமாக நாடு முழுவதும் உள்ள சாலைகளுக்கு அடுத்து நமது நினைவுக்கு வரும் மற்றொரு சாலை வடக்கு தெற்கு நெடுஞ்சாலை. தலைநகர், புத்ரா ஜெயா வாசிகளுக்கு இன்னும் சில நெடுஞ்சாலைகளின் பெயர்கள் நினைவில் நிற்கும்.
இவற்றை நிர்மாணிப்பதற்கு நாட்டின் ஐந்தாண்டு திட்டங்களிலும் ஆண்டுதோறும் வெளியிடப்படும் வரவு செலவுக் கணக்கறிக்கைகளிலும் ஒதுக்கீடுகள் வரையறுக்கப்படும். நிர்மாணிப்புப் பணிகள் முடிவுற்ற பின்னர், மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது கட்டணம் விதிக்கப்படுவது வழக்கம்.
ஒரு சில பெருநாள் காலங்களில் மட்டும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்படும்; அவ்வேளையில் மக்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நிர்மாணித்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நாள் முதல் இன்று வரை நெடுஞ்சாலை கட்டணம் விதிக்கப்படாத ஒரு விரைவுச் சாலை மலேசியாவில் உள்ளது என்றால், அது ரவாங் விரைவுச் சாலைதான் (பைப்பாஸ்).
சிலாங்கூர் மாநிலத்தில், செரெண்டா பகுதியையும் ரவாங்கையும் இணைக்கும் ஒரு முக்கிய விரைவுச் சாலையாக இஃது அமைந்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் நிர்மாணிக்கத் தொடங்கிய இந்த மாபெரும் நிர்மாணிப்புப் பணி நிறைவடைந்து கடந்த 2017ஆம் ஆண்டு, நவம்பர் 27ஆம் நாள், இரவு 9.00 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்டது.
23 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த விரைவுச் சாலை 628 மில்லியன் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இதன் நடுவே தரை மட்டத்தில் இருந்து 58.2 மீட்டர் உயரத்தில் 2.7 கிலோமீட்டர் தூரம் கொண்ட மேம்பாலமும் இணைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, பலர் இந்தத் தகவலை அறிந்திருக்கக்கூடும், ஆனால், இந்த விரைவுச் சாலை ஏன் இவ்வளவு உயரத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டும்? இவ்வளவு வளைவும் நெலிவும் ஏன்? என்றாவது நாம் சிந்தித்ததுண்டா?
இந்தப் பாலத்திற்குப் பல சிறப்பு பண்புநலன்கள் இருக்கிறது. அவற்றை நாம் ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம்.

  1. வளைவுகள் அதிகம் கொண்ட விரைவுச் சாலை
    விரைவுச் சாலை என்றாலே ஒரு நேர் சாலை என்றுதான் நம் மனவோட்டத் திரையில் தோன்றும். ஆனால், இந்த விரைவுச் சாலை அதற்கு முரணாக வளைவுகள் அதிகம் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமும் இருக்கிறது. இந்த விரைவுச் சாலை நிர்மாணித்த இடத்தில் இங்கு மட்டுமே வளரக்கூடிய கியாம் கன்சிங் அல்லது மெராவான் கன்சிங் மரம் இருக்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல இந்தப் பகுதியில் பெரும்பான்மையாக இந்த மரம் வளர்ந்திருக்கிறது. மலேசியாவில் வேறு எங்கும் இந்த மரம் கிடையாது என்பது வியப்பாகும்.
    பாதுகாக்கப்பட்டத் தாவரங்கள் பட்டியலில் இந்த மரம் இடம்பெற்றிருப்பதால், அனுமதி இல்லாமல் இந்த மரத்தை வெட்டினாலோ அல்லது கிளைகளை ஒடித்தாலோ ஒரு மில்லியன் வெள்ளி வரையிலான தண்டம் விதிக்கப்படும் என்பது சட்டமாகும்.

BOX NEWS கியாம் கன்சிங் மரம்
கியாம் கன்சிங் மரம் ‘ஹோப்பி சபலாட்டா’ எனும் மர வகை, ‘டிப்தெரோகார்பா’ எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். குறிப்பிட்டு ஒரே ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும்; அதனை வாழ்விடமாகக் கொண்டிருக்கும். அதுதான் சிலாங்கூரில் உள்ள கன்சிங் பாதுகாக்கப்பட்ட வனப் பூங்கா.
சிறிய மரமான கியாம் கன்சிங் வழவழப்புத் தன்மை கொண்டதாகும். இந்த மரத்தின் தண்டின் சுற்றளவு ஒரு மீட்டர் என்று கூறப்படுகிறது. ‘ஹோப்பி சபலாட்டா’ வகை மரங்கள் அழிந்து வரக்கூடிய தாவரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் இனப் பெருக்கம் மிகவும் தனித்தன்மையானது. தாய் மரத்தில் இருந்து வளரக் கூடிய இந்த மரம் மரபியல் அடிப்படையில் உண்மையான மரத்தைப் போலவே இருக்கும்.
தாவர விரும்பிகள் இந்த மரம் பூப்பது குறித்து நேரில் காண வேண்டும் என்றால், கெப்போங்கில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா (பொட்டானிக்கல் கார்டன்) சென்று பார்க்கலாம்.

  1. உயரமான விரைவுச் சாலை
    காலை வேளையில், குறிப்பாக மழை பெய்து ஓய்ந்த பிறகு மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் விண்ணைப் பிளந்து கொண்டு அந்தப் பாலம் அமைந்திருப்பது போலக் காட்சியளிக்கும். இது மற்ற நெடுஞ்சாலைகளிலோ அல்லது விரைவுச் சாலைகளிலோ காணக் கிடைக்காத அரிய காட்சியாகும்.

ரவாங் விரைவுச் சாலை
தகவல் துளிகள்
• செரெண்டா – ரவாங் இணைப்புச் சாலை 23 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இதனை நிர்மாணித்த பொறியியலாளர் துவான் ஹாஜி ராட்ஸாலி மொக்தார் எனும் மலேசியர்.
• கோலாலம்பூருக்குச் செல்லும் வழியில் உச்ச நேரத்தில் ஏற்படும் சாலை நெரிசலால் 2 மணி நேரத்திற்கும் மேலான அயண நேரத்தை 30 நிமிடமாகக் குறைத்திருக்கிறது. இதனால், செரெண்டா, பத்தாங் காலி, தஞ்சோங் மாலிம் ஆகிய வட்டாரங்களுக்குச் செல்வதை எளிமைபடுத்துகிறது.
• தரை மட்டத்தில் இருந்து 58.2 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மலேசியாவின் மிக உயரமான பாலம் இந்த விரைவுச் சாலையில் அமைந்திருப்பது அதன் தனித்தன்மை.
• சிலாங்கூரில் அமைந்துள்ள தாமான் வாரிசான் எனும் அடர் வனப் பூங்காவைக் கடந்து இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணிப்பின்போது அந்தப் பாலத்திற்கு அடியில் இருக்கும் காட்டுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது எனும் நோக்கில் இவ்வாறு அதிக வளைவுகளோடு நிர்மாணிக்கப்பட்டது.
• அந்த அடர் வனப் பூங்காவையும் அங்கிருக்கும் தாவரங்களையும் விலங்குகளையும் பேணி பாதுகாக்கும் நோக்கில் காட்டின் மேல் கடந்து போகும் வகையில் இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
• இங்கு மட்டுமே வளரும் அரிய வகை மரமான கியாம் கன்சிங் மரத்தைக் காக்கும் நோக்கில் அந்தப் பாலத்தின் கட்டுமானம் அமைந்துள்ளது.

நிர்மாணிப்புப் பின்னணி
ரவாங் பட்டணத்தில் ஏற்படும் சாலை நெரிசலைக் குறைக்கும் வகையில் 9அது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்தப் பாலத்தை நிர்மாணிக்க முடிவெடுக்கப்பட்டது. பொதுப் பணித் துறை தவிர நிர்மாணிப்புப் பணியில் மூன்றாம் தரப்பினரின் ஈடுபாடும் இருக்கும் என்பதால் இந்த விரைவுச் சாலை கட்டி முடிக்கப்பட 2,132 நாள்கள், அதாவது ஆறு ஆண்டுகள் வரை கூடுதலானது. இதற்காகக் கடந்த 2006ஆம் ஆண்டு 209.47 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டது.
இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களாலும் கூடுதல் ஒப்பந்தங்களாலும் இந்தத் திட்டம் நிறைவடைய கால தாமதமும் கூடுதல் செலவும் ஏற்பட்டது.
 தாமான் வாரிசான் சிலாங்கூரைக் கடந்து செல்ல 3.3 கிலோமீட்டர் தூரம் மாற்று வழி அமைக்கப்பட்டது.
 கூடுதலாக 1.57 கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டது.
 2011ஆம் ஆண்டு, டிசம்பர் 15ஆம் நாள் நிறைவுறும் எனக் கணிக்கப்பட்டிருந்த இந்த நிர்மாணிப்புப் பணி 2015ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டது. கூடுதலாக 390 மில்லியன் வெள்ளி நிதியும் வழங்கப்பட்டது.

9ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் 630 மில்லியன் வெள்ளி மதிப்புடைய பெரும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. ஆனால், தொலைநோக்குப் பார்வையில், இந்தத் திட்டத்தால் மக்களுக்கு அதிக பயன் உள்ளது.
மேலும், ரவாங்கில் இருந்து செரெண்டாடுக்கும், செரெண்டாவில் இருந்து ராவங்கிற்கும், இரு வழிகளிலுமே நெடுஞ்சாலை கட்டணம் கிடையாது என்பது இந்த விரைவுச் சாலையின் மேலும் ஒரு சிறப்பாகும்.

இருவழிச் சாலையாகக் கட்டப்பட்ட இரவாங் விரைவுச் சாலை அகலமாகவும் வசதியாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 3.5 மீட்டர் வரை அகலம் கொண்ட சாலையில் ஒரு மணி நேரத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்; வாகனத்தைச் செலுத்தலாம்.
ஏறத்தாழ 6 கிலோமீட்டர் தரை வழி பயணத்திற்குப் பிறகு, 2.7 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பாலத்தில் பயணிப்போம். ‘கிராண்ட் கான்யன்’ போன்ற அனுபவத்தை அந்தப் பகுதியில் நாம் அனுபவிக்கலாம்.
அடர் வனத்தின் ஊடே 58.2 மீட்டர் உயரத்தில் அந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விரைவுச் சாலை சில மலை பகுதிகளைக் கடந்து செல்வதால் இது கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 150 மீட்டர் உயரம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இணையத்தில் இந்த விரைவுச் சாலை, அதன் நடுவே இருக்கின்ற பாலம், இப்பாலம் அமைக்கப்பட்ட மலை பகுதிகள் என அனைத்தையும் பார்க்கும்போது சிலருக்கு இந்தோனேசியாவின் கேலோக் 9 பாலம் போல தோன்றும். இன்னும் சிலருக்குப் பிரெஞ்சு தேசத்தின் மில்லியாவ் A 75 பாலம் போல காட்சியளித்திருக்கும். ஆனால், மிகச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்காவில் இருக்கும் கோலோராடோ – கிளென்வூட் கென்யனில் இருக்கும் இண்டர்ஸ்டேட் 70 பாலத்தோடு ஒப்பீடுகையில், மிகத் துல்லியமாகப் பொருந்தும் எனலாம்.
கடந்த 2005ஆம் ஆண்டு அடர் வனத்தைக் காப்பது, அதில் இருக்கும் அரிய வகை தாவரங்களையும் விலங்குகளையும் காக்கும் முயற்சியை மலேசிய அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. ஆனால், தற்போது இயற்கையைக் காக்கும் முயற்சியில் அரசாங்கம் இன்னமும் முழுமையாக அதன் கொள்கை பிடிப்புடன் இருக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.
தனிநபர்களையும் அரசு சாரா அமைப்புகளையும் இயற்கையைக் காக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தும் அரசாங்கம் இதர மேம்பாட்டுத் திட்டங்களிலும் இதே கொள்கையைப் பின்பற்றுகிறதா எனவும் இங்கே கேள்வியாக இருக்கின்றது.

ஊருக்கு மட்டும்தான் உபதேசமோ?

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்