பத்து பூத்தே தீவுமீட்டெடுக்கப்படுமா?

பத்து பூத்தே , ஜோகூருக்கு அருகில், தென் சீனா கடலை நோக்கி, சிங்கப்பூர் நீரிணையில் வீற்றிருக்கும் ஒரு தீவாகும். போர்த்துக்கீசியர் மொழியில் இந்த தீவை “பெட்ரா பிராங்கா” என்று அழைக்கிறார்கள். ஒரு கால்பந்து திடல் அளவிலேயே இருக்கும் இந்த தீவில் 1851 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட ஹோர்ஸ்பார்க் என்ற ஒரு கலங்கரை விளக்கத்தை சிங்கப்பூர் நிர்வகித்து வருகிறது.

ஜோகூர் நீரிணையையொட்டியுள்ள இந்த பவளப்பாறைத் தீவு, யாருக்கு சொந்தம் என்பது மீதான உரிமைப் போராட்டம் , மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையில் சர்ச்சையாக மாறியது. இரு நாடுகளுமே அந்த பவளப்பாறைத் தீவு தங்களுக்கே சொந்தம் என்றுகூறி உரிமைப் போராட்டத்தை நடத்தியது.

இறுதியில் இதன் மீதான வழக்கு, , நெதர்லாந்து, தி ஹெக்கில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 2008 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு, சிங்கப்பூருக்கு சாதகமாக அமைந்தது. அந்த தீவு சிங்கப்பூருக்கு சொந்தம் என்று அனைத்துலக நீதிமன்றம் அறிவித்தது.

இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தும், ஜோகூருடனும், ஆட்சியாளர்கள் மன்றத்துடன் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்ததில் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டருக்கு வருத்தம் உள்ளது.

பத்து பூத்தே தீவு, ஜோகூருக்கு சொந்தமானது என்று வாதிட்டாலும் அந்த தீவில் உள்ள கலங்கரை விளக்கம், சிங்கப்பூர் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன் பராமரிப்பு பணியை கடைசி வரை சிங்கப்பூர் மேற்கொண்டு வருவதால் சில சான்றுகளை அடிப்படையாக கொண்டு அத்தீவு சிங்கப்பூருக்கே சொந்தமானது என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது.

அனைத்துலக நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருந்தும், மேல்முறையீட்டு மனுவை, 2018 இல் துன் மகாதீர் முகமது அரசாங்கம் மீட்டுக்கொண்டது, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் மலேசியா இழந்தது.

ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிமினின் தகவலின்படி வரலாற்று ரீதியாக அந்த பத்து பூத்தே தீவு, ஜோகூருக்கு சொந்தமானது என்பது மூன்று புதிய ஆதாரங்கள் லண்டனில் உள்ள நூல் நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கும், தீர்ப்பை சீராய்வு செய்வதற்கும் மலேசியாவிற்கு அற்புதமான வாய்ப்புகள் இருந்தும்,, மலேசியா தவறவிட்டு விட்டது என்பது ஜோகூர் சுல்தானின் வாதமாகும்.

இப்படியொரு தீவு இருப்பது மலேசியர்கள் பலருக்கு தெரியாது என்பது மற்றொரு விவகாரம் என்றாலும் கடந்த 1987 ஆண்டு அந்த பத்து பூத்தே தீவை சுற்றி மீன்பிடித்துக் கொண்டு இருந்த மலேசிய மீனவர்கள், சிங்கப்பூர் கடல்சார் வாரிய அதிகாரிகளால் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த தீவு மீதான உரிமைப் போராட்டம் மலேசியாவிற்கும் , சிங்கப்பூருக்கும் இடையில் வெடிக்கத் தொடங்கியது.

பத்து பூத்தே தீவு, மலேசியாவிற்கே சொந்தம் என்பதற்கு வரலாற்று ரீதியாக பல ஆதாரங்கள் உள்ளன என்பதே பொதுவான வாதமாகும். 137 மீட்டர் நீளமும், 3,300 மீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ள இத்தீவு, ஜோகூரிலிருந்து 7.7 கடல் மைல் தொலைவிலும், சிங்கப்பூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அத்தீவில் கலங்கரை விளக்கம் ஒன்று நிறுவப்படுவது, ஜோகூர் நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பானதாகும் என்று தொடுவாய் குடியேற்றப்பகுதியை கொண்டுள்ள மாநிலங்கள் உணர்ந்துள்ளன.

இதன் காரணமாக அந்த பத்து பூத்தே தீவில் ஒரு கலங்கரை விளக்கத்தை நிறுவுவதற்கு 1844 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் ஹோர்ஸ்பர்க் என்பவர் ஜோகூர் சுல்தானின் அனுமதியை பெற்றுள்ளார். அதற்கான வரைப்படத்தை கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஒருவர் வரைந்துள்ளார்.

அந்த தீவு, கப்பல்கள் மோதுவதற்கு அபாயகரமான பகுதியாக விளங்குவதால் கப்பல்களுக்கு வழிகாட்ட ஒரு கலங்கரை விளக்கம் அவசியம் என உணரப்பட்டு, கால்பந்தாட்ட திடல் அளவிலேயே இருந்த அத்தீவில் ஒரு கலங்கரை விளக்கம் இருப்பதை நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு கடலோடியான ஜோஹான் வான் லின்ஸ்சோலன், 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு வரலாற்று குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

சீனாவிற்கு செல்வதற்கும், அங்கிருந்து வருவதற்கும் அத்தீவில் அமைந்த கலங்கரை விளக்கம் ஓர் அத்தியாவசியத் தேவையாக இருந்தது. 1824 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி ஆங்கிலேயர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்ட்ட உடன்பாடு பின்னர் ஆகஸ்ட 2 ஆம் தேதி செய்து கொள்ளப்பட்ட கிளாவ்புர்ட் உடன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த பத்து பூத்தே தீவு, ஜோகூர் சுல்தான், அரச குடும்பத்திற்கே சொந்தமானது என்று வலியுறுத்துகிறது.

1844 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி அந்த தீவில் ஹோர்ஸ்பார்க் என்ற ஒரு கலங்கரை விளக்கத்தை நிறுவுவதற்கு சிங்கப்பூரில் இருந்த ஆங்கிலேயர்களுக்கு தெமங்கோங்கும், ஜோகூர் சுல்தானும் அனுமதி கடிதத்தை வழங்கியுள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜுன் 19 ஆம் தேதி ஜோகூர் சட்டமன்றத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த ஜோகூர் சுல்தான், காலசென்ற சுல்தான் இஸ்கண்டார் சுல்தான் இஸ்மாயில், அந்த பவளப்பாறைத் தீவு, ஜோகூருக்கு சொந்தமானதாகும். சிங்கப்பூருக்கு அல்ல, இதற்கான ஆதாரத்தை நிரூபிக்கப் போவதாக உறுதி அளித்து இருந்தார்.
பத்து புத்தே தீவு சாதாரணமானது அல்ல. ஜோகூர் கடற்பகுதியில் வியூகம் நிறைந்த இடத்தில் வீற்றிருப்பதால் அப்பகுதியை கடக்கும் கப்பல்களுக்கு மிக பாதுகாப்பானதாகும். கடந்த 1824 ஆம் ஆண்டுக்கும் 1851 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 25 கப்பல் விபத்துகள் அந்த தீவில் நிகழ்ந்துள்ளன.

ஒரு முக்கிய தீவாக கருதப்படும் பத்து பூத்தே, ஜோகூருக்குதான் சொந்தமானது என்பதற்கு மூன்று புதிய ஆதாரங்கள் இருப்பதாக ஜோகூர் சுல்தான் அறிவித்து இருப்பதால், அந்த தீவு தொடர்பான தீர்ப்பை சீராய்வு செய்வதற்கான முயற்சிகளை மலேசியா முன்னெடுக்குமானால் கைநழுவிய வரலாற்று சிறப்புமிக்க அந்த தீவை மலேசியாவினால் மீட்டெடக்க முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்