கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மனைவியை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு, ஏப்ரல் 25-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் -KLIA டெர்மினல் 1-இல் மனைவியை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்து, துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியதாக ஆடவர் ஒருவர் சேப்பாங் சேசியேன் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

ஒரு சுற்றுலா நிறுவன நிர்வாகியான 38 வயது ஹபிசுல் ஹவாரி எனும் அவ்வாடவர், ஏப்ரல் 14ஆம் தேதி பின்னிரவு மணி 1.09 அளவில், KLIA டெர்மினல் 1-இல் அவரது மனைவியான 38 வயது ஃபாரா எம்டி இசா மீது அந்த தாக்குதலை தொடுத்ததாக, நீதிபதி டாக்டர் அஸ்ரோல் அப்துல்லா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் அவர் மீது முதல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையில் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

அந்த சம்பவத்தின் போது, அவ்வாடவரின் மனைவியின் மெய்க்காப்பாளரான 38 வயது முகமது நூர் ஹடித் ஜைனி என்பவர் படுகாயமடைந்துள்ளதால், ஹபிசுல் ஹவாரி மீது குற்றவியல் சட்டம் செக்சியன் 307-இன் கீழ் இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. அந்த குற்றமும் நிரூபிக்கபட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறை, அபராதம் அல்லது பிரம்படிகள் அவருக்கு விதிக்கப்படலாம்.

தன் மீதான இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்த ஹபிசுல் ஹவாரி மேல்விசாரணைக் கோரினார். அரசு தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, அவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஜூன் மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

நேற்று கிளாந்தான், கோத்தா பாரு-விலுள்ள சேசியேன் நீதிமன்றத்தில் ஹபிசுல் ஹவாரி முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சுடுதம் ஆயுதம், துப்பாக்கி தோட்டாக்கள், இதர நபர்களின் அடையாள அட்டைகள் முதலானவற்றை வைத்திருந்தது தொடர்பில், அவருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்