கோல குபு பாரு இடைத்தேர்தலில், பிரதமர் அன்வாருக்கு தோல்வியை ஏற்படுத்த பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.

கோல குபு பாரு, ஏப்ரல் 19-

மே மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் முன்னிறுத்துகின்ற வேட்பாளரை வீழ்த்துவதற்கான வேலைகளை சில தரப்பினர் முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.

பக்காத்தான் ஹாராப்பான் ஆட்சி காலத்தின் போது, அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நபருடன் அக்கூட்டணியின் உறுப்புக் கட்சி ஒன்றின் முன்னாள் தலைவர் உள்பட சிலர், கோல குபு பாருவிலுள்ள இந்திய சமூகத் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

வரக்கூடிய அத்தொகுதி இடைத்தேர்தலை, அங்குள்ள இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கக் கூறி அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத டிஏபி-யின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறுகையில், கோல குபு பாரு இடைத்தேர்தலில் பேரிக்காதான் நசியனால்லை வெற்றிபெற செய்வது தங்களுடைய நோக்கம் கிடையாது. நடப்பு அரசாங்கத்தின் செயல்பாட்டின் மீது இந்திய சமூகத்தினர் அதிருப்தியில் உள்ளதை பிரதமருக்கு தெரியப்படுத்தவே தாங்கள் அந்நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக அவர் கூறினார்.

கடந்த ஓராண்டு கால நிர்வாகத்தில் அன்வார் தலைமையிலான அரசாங்கம் இந்திய சமூகத்தை புறக்கணித்து வருவது தெளிவாக தெரிகின்ற நிலையில், இந்திய சமூகத்தின் அதிருப்தியை அவருக்கு புரிய வைக்க, தேர்தலை புறக்கணிக்கும் நடவடிக்கை, சிறந்ததொரு அணுகுமுறையாக இருக்கும் என தாங்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு இதுவரையில் அவர் வழங்கியுள்ள மானியங்கள், மெட்ரிகுலேஷனில் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்த விபரங்கள் தங்களுக்கு தெரிய வேண்டும். அவரது தலைமைத்துவத்தின் கீழ், நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சரவையில் தமிழருக்கு இடமளிக்கப்படவில்லை.

மலாய் மற்றும் சீன சமூகங்களைச் சேர்ந்த அரசியல் செயலாளர்களை நியமித்துக் கொண்டுள்ள பிரதமர், இந்திய சமூகத்திலிருந்து யாரையும் நியமிக்கவில்லை. கோல குபு பாரு இடைத்தேர்தலை இந்திய சமூகத்தினர் புறக்கணித்தால் மட்டுமே, அவற்றையெல்லாம் ஒற்றுமை அரசாங்கம் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.

அண்மையில், இந்திய சமூகத்தின் பிரச்சனைகளைக் களைய தாம் ஏதும் செய்யவில்லை என கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்திருந்த பிரதமர், அச்சமூகத்தினரின் நலனை முன்னிறுத்தி, தாம் எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்