சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் சோதனை

நாட்டில் முறையான பயணப் பத்திர ஆவணமின்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள அந்நிய நாட்டைச் சேர்ந்த குடியேறிகளுக்கு எதிராக அரச மலேசிய போலீஸ் படை, விரைவில் நாடு தழுவிய நிலையில் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது.

சட்டவிரோதக் குடியேறிகள் அதிகளவில் தங்கியுள்ள சில முதன்மை இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

ஆவணமற்ற குடியேறிகளின் பிரச்னை, கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் அல்ல, ஜோகூர், கெடா, மற்றும் கிளந்தான் போன்ற மாநிலங்களிலும் இருப்பதாக அயோப் கான் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் நாடு தழுவிய நிலையில் வெகு விரைவில் போலீசார், மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை முடுக்கி விடவிருக்கின்றனர் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அயோப் கான் இதனை தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநகரில் மினி டாக்கா எனப்படும் ஜாலான் சிலாங் – கில் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி போலீசார் தொடங்கிய மிகப்பெரிய சோதனை நடவடிக்கையில் 1,101 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு குழந்தைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தவிர கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 4 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அயோப் கான் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்