செண்டாயான் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை

சிரம்பான், ஏப்ரல் 13-

சிரம்பானுக்கு அருகில் Cenviro Sdn. Bhd. நிறுவனத்தின் அட்டவணையிடப்பட்ட ரசாயன கழிவுப்பொருட்கள் சேமிப்புக்கிடங்கில் நேற்று ஏற்பட்ட தீ சம்பவத்தை தொடர்ந்து கடும் சுற்றுச்சூழல் பாதிப்பினால் தங்கள் உடல் நிலை பாதிக்கப்படக்கூடும் என்று செண்டாயான் வட்டார மக்கள் அச்சம் கொள்ள அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் காற்றின் தரம், கட்டுப்பாட்டில் இருக்கிறது. அச்சம் கொள்ள அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில மனித வளம், பருவநிலை மாற்றம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தெரிவித்துள்ளார்.

தீச் சம்பவத்தினால் ரசாயன கழிவுகளின் நச்சத்தன்மை காற்றில் கலந்து இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இதுவரையில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் முககவரி அணிய வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று வீரப்பன் அறிவுறுத்தினார்.

தீ ஏற்பட்ட அந்த ரசாயன கிடங்கில் நடத்தப்பட்ட விரிவான சோதனைக்கு பின்னர் அப்பகுதியை தீயணைப்பு, மீட்புப்படையினர் இன்று அதிகாலை 4.23 மணியளவில் சுற்றுச்சூழல் தர கட்டுப்பாடு மையத்திடம் ஒப்படைத்து விட்டனர்.

தற்போது நடப்பு நிலை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில் இதுவரையில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக வீரப்பன் தெரிவித்தார்.

அந்த ரசாயன கழிவுப்பொருள் கிடங்கில் நேற்று மாலை 5.40 மணியளவில் ஏற்பட்ட தீ, உக்கிரமாக பரவியதைத் தொடர்ந்து 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணி நேரம் கடும் போராட்டத்திற்கு பின்னர் தீயை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்