ஜம்ரி வினோத் காளிமுத்து உட்பட இரு சமயப் போதகர்களுக்குஎதிராக தனிப்பட்ட முறையில் குற்றவியல் வழக்கை தொடுக்க முடியுமா?

பெட்டாலிங் ஜெயா, மே 21-

இந்து மதம் உட்பட இஸ்லாம் அல்லாத மதங்களையும், அவற்றின் நடைமுறைகளையும் அவமதித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர்களான ஜம்ரி வினோத் காளிமுத்து மற்றும் ஃபிர்தௌஸ் வோங் ஆகியோருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுப்பதற்கு அனுமதிக்க முடியுமா? முடியாதா? என்பது குறித்து புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.

ஜம்ரி வினோத் காளிமுத்து மற்றும் ஃபிர்தௌஸ் வோங் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டம் 133 ஆவது பிரிவின் கீழ் தனிப்பட்ட முறையில் வழக்கை தொடுப்பதற்கு தொடர்ந்து போராடி வரும் சமூக ஆர்வலரான எஸ். சசிகுமாரின் விண்ணப்பத்தை ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பின்னர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அத்தீர்ப்பை எதிர்த்து அந்த சமூக போராட்டவாதி தற்போது அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அப்பீல் நீதிமன்ற நீதிபதிகளான முகமது நஸ்லான் முகமது கசாலி மற்றும் முகமது ஜைனி ஆகியோருடன் இணைந்து சசிகுமாரின் மேல்முறையீட்டை இன்று செவிமடுத்த அப்பீல் நீதிமன்ற நீதிபதி அஹ்மத் ஜைதி இப்ராஹிம் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

நாட்டில் குற்றவியல் வழக்கை தொடுப்பது என்பது சட்டத்துறை அலுவலகத்திற்கு உட்பட்ட பிராகியூஷன் தரப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.

அத்தகைய குற்றவியல் வழக்கை, ஒருவருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஒருவர் தொடுக்க வேண்டுமானால் மாஜிஸ்திரேட்டிடம் புகார் செய்ய வேண்டும் என்பதுடன் அத்தகைய வழக்கை தொடுப்பதற்கு சட்டத்துறை அலுவலகத்தை நிர்பந்திக்கச் செய்யும் ஓர் உத்தரவை மாஜிஸ்திரேட் மூலம் பெற வேண்டும்.

அந்த வகையில் இந்து மதம் உட்பட இஸ்லாம் அல்லாத மதங்களை இழிவுப்படுத்தியதாக கூறப்படும் ஜம்ரி வினோத் காளிமுத்து மற்றும் ஃபிர்தௌஸ் வோங் ஆகியோருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு, அவ்விருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது என்று சட்டத்துறை அலுவலகம் அறிவித்து விட்டதைத் தொடர்ந்து அந்த இரண்டு சமயப் போதகர்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் குற்றவியல் வழக்கை தொடுப்பதற்கு சமூக ஆர்வலர் சசிகுமார் கடந்த நான்கு ஆண்டு காலமாக போராடி வருகிறார்.

சசிகுமாரின் விண்ணப்பம், ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுப்படி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூன்றாவது முயற்சியாக தற்போது அப்பீல் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்