ஜொகூர்-ரில் நிகழ்ந்த பரபரப்பான சம்பவம்; உலு திராம் போலீஸ் நிலையத்தினுள் நுழைந்து, இரு போலீஸ்க்காரர்களைக் கொன்ற முகமூடி அணிந்த ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜொகூர் பாரு, மே 17-

ஜொகூர், ஜொகூர் பாரு-விலுள்ள உலு திராம் போலீஸ் நிலையத்தில், கருப்பு நிற உடையுடன் முகமூடி அணிந்தவாறு உள்ளே நுழைந்த ஆடவர் ஒருவர், கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில், இரு போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.

மேலுமொரு போலீஸ்க்காரர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

இன்று அதிகாலை மணி 2.45 அளவில் நிகழ்ந்திருந்த அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ஜொகூர் போலீஸ் தலைவர் கோமிஷனர் எம் குமார், தாக்குதலை நடத்திய ஆடவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

உயிரிழந்த இரு போலீஸ்காரர்கள் மற்றும் கொலையாளியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காயத்திற்கு இலக்காகியுள்ள மற்றொரு போலீஸ்காரரும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடக்கக்கட்ட விசாரணையில், போலீஸ் நிலையத்தினுள் பாராங்கத்தியுடன் நுழைந்த அவ்வாடவர், போலீஸ்காரர்களை தாக்கியதோடு, அவர்களிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு, அவர்களையே சுட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அத்தாக்குதலில், கொன்ஸ்டாபெல் பதவியை வகிக்கும் இருவரில் ஒருவருக்கு பின்புற கழுத்து மற்றும் தலை பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயங்களால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

மற்றொருவருக்கு, வயிறு மற்றும் கையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சுடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, எம் குமார் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்