தமது பாலிய நண்பருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக பிரபல கலைஞர் VJ Emergency –க்கு 12 ஆண்டு சிறை

செப்பாங், மார்ச் 25.

தம்முடைய பாலிய நண்பரான பொறியியலாளர் ஸ்ரீ கணேஷ் கணபதி பிள்ளைக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக நாட்டின் பிரபல கலைஞரும், மஇகா முன்னாள் தேசிய கலை, கலாச்சாரப்பிரிவின் தலைவருமான VJ Emergency க்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

ஸ்ரீ கணேஷ் கணபதி பிள்ளையை காரோடு,தீயிட்டு கொளுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த 46 வயதான VJ Emergency- க்கு எதிரான கொலை குற்றச்சாட்டு, குற்றவியல் சட்டம் 302 பிரிவிலிருந்து நோக்கமில்லா கொலையாக குற்றவியல் சட்டம் 304 பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து VJ Emergency விதிக்கப்படவிருந்த தூக்குத்தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனையிலிருந்த அவர் தப்பினார்.

மஇகாவின் கலை, கலாச்சாரப் பிரிவுக்கு பொறுப்பேற்று இருந்த விஜயன் பழனியப்பன் என்ற இயற்பெயர் கொண்ட VJ Emergency, கடந்த 2020 ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பு, தம்முடன் சிறு வயது முதல் நண்பராக இருந்து வந்த 42 வயது ஸ்ரீ கணேஷ் கணபதி பிள்ளையை காரோடு எரித்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி சிப்பாங், கோத்தா வாரிசான், ஏர்போர்ட் சிட்டி 2, ஏர்போர்ட் பிஸ்னெஸ் சென்டர் அருகில் ல் ஒரு புதர்பகுதியில் முற்றாக எரியூட்டப்பட்ட டொயோட்டா ஹாரியர் காரில் கருகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட ஸ்ரீ கணேஷ் கணபதி பிள்ளையின் உடலைத் தொடர்ந்து தொழில் தகராறு காரணமாக இந்த கொலையை செய்துள்ளார் என்று கூறி, மலேசிய இந்திய கலைஞர்கள் இயக்கத்தின் தலைவரான VJ Emergency கைது செய்யபட்டார்.

இந்த கொலை வழக்கில் 12 பேர் அளித்த சாட்சியத்தை தொடர்ந்து VJ Emergency க்கு எதிரான தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் டத்தோ என். சிவநந்தன் தெரிவித்தார்.

VJ Emergency க்கு அளிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையில் ஸ்ரீ கணேஷ் கணபதி பிள்ளையின் குடும்பத்தினர் மனநிறைவு கொள்வதாக ஸ்ரீ கணேஷ் கணபதிபிள்ளையின் மைத்துனரும், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருமான எஸ். தேவகுமரன் தெரிவித்தார்.

அதிகமான தமிழ் பாடல்களை பாடி, ஆல்பம் வெளியிட்டவரான VJ Emergency- கலைஞர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கியவர் ஆவார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்