நஜீப்பை மட்டும் தண்டித்து இருப்பது நியாயமில்லை

புத்ராஜெயா, மே 17-

1MDB ஊழலில் முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கை மட்டும் தண்டித்து இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. மாறாக, 1MDB ஊழலை மறைப்பதற்கு துணையாகவும், உடந்தையாகவும் இருந்த அன்றைய சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி போன்றவர்கள் தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டுமே தவிர பதவியிலிருந்து அவர்களை தாம் நீக்கியதற்காக அரசாங்கம் இழப்பீடு தந்து இருக்கக்கூடாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வாதிட்டுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு தாம் தலைமையேற்ற போது தாம் முதலில் செய்த நடவடிக்கை சட்டத்துறை தலைவர் அபாண்டி அலியை நீக்கியதாகும். ஆனால், தன்னை நீக்கிய செயல் சட்டவிரோதமானது என்று கூறி, இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இருந்த போது, அபாண்டி அலி 22 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி இழப்பீடு கோரி தாம் உட்பட அரசாங்கத்திற்கு எதிராக மானநஷ்ட வழக்கை தொடுத்து இருந்ததை துன் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

அபாண்டி அலி தொடுத்திருந்த இந்த வழக்கை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்காக அவர் கேட்ட இழப்பீட்டுத் தொகையை கொடுக்க இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

உண்மையிலேயே அபாண்டி அலிக்கு அந்த இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் கொடுத்து இருக்கக்கூடாது. காரணம், சட்டத்துறை தலைவர் என்ற முறையில் நஜீப்பின் 1MDB வழக்கை மூடி மறைத்ததற்காக அபாண்டி அலி தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.

DAP மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கோரி அபாண்டி அலி தொடுத்த அவதூறு வழக்கை உயர்நீதிமன்றம், அப்பீல் நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றம் ஆகிய மூன்று நீதிமன்றங்கள், 7 நீதிபதிகள் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள் என்பதை துன் மகாதீர் தமது வாதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். .

நாட்டின் சட்டத்துறை தலைவர் என்ற முறையில் அபாண்டி அலி தனது கடமையை செய்யத் தவறிவிட்டார் என்பதை அந்த 7 நீதிபதிகளும் ஒரு சேர ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதையே இந்த தீர்ப்பு காட்டுகிறது என்று துன் மகாதீர் தனது அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்