நிதி கோரலுக்கு போலி ஆவணங்களை சமர்பித்திருந்த குற்றத்தை பெர்லிஸ் மந்திரி பெசார் மகன் மறுத்தார்

கங்கார், மே 23-

19 ஆயிரத்து 505 வெள்ளி, 10 சென்னை உட்படுத்திய நிதி கோரலுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக, பெர்லிஸ் மந்திரி பெசார் மகனான முகமது சியாஃபீக் முகமது சுக்ரி-க்கு எதிராக இன்று கங்கார்-ரிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

துவாங்கு பௌசியா மருத்துவமனையில், பெர்லிஸ் ஆட்சியாளர் துவாங்கு சையத் சிராஜுதீன் புத்ரா ஜமாலுல்லைல்-லுக்கு பானங்களை வழங்கிய சேவைக்காக, முகமது சியாஃபீக் அத்தொகையை உட்படுத்திய நிதியைக் கோரியதாக, நீதிபதி நோர்சல்ஹா ஹம்சா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி, மாநில அரசாங்கத்தின் தலைமை செயலாளர் அலுவலகத்திலுள்ள மாவட்ட நிர்வாக பிரிவு உதவியாளர் நூருல் நபிலா முகமது சுக்ரி என்பவரிடம் அந்த ஆவணங்களை அவர் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும், PAS கட்சி தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்-ங்கின் மருமகனுமாகிய முகமது சியாஃபீக், தன்மீதான குற்றச்சாட்டை மறுத்து மேல்விசாரணைக் கோரினார்.

பின்னர், 20 ஆயிரம் வெள்ளி பிணை தொகையில், அவர் வெளியில் செல்ல அனுமதித்த நீதிபதி, வழக்கின் மறுசெவிமடுப்பை ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்