பினாங்கில் அருணகிரி நாதர் விழா சிறப்பாக நடைபெற்றது

பினாங்கு, செபராங் ஜெயா, அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை மாலை 6.45 மணி முதல் இரவு 9.30 மணி வரை அருணகிரிநாதர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் செபராங் ஜெயா வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு, முருகப்பெருமானின் அந்த உன்னத அருளாளருக்கு சிறப்பு சேர்த்தனர்.

மலேசிய இந்து சங்கம், செபராங் ஜெயா வட்டாரப் பேரவை ஏற்பாட்டில் செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலயம் மற்றும் மலேசிய முருக பக்திப் பேரவை ஆதரவுடன் பேரவைத் தலைவர் சமயக் காவலர் “விவேகரத்னா” வர்மன் தலைமையில் அருணகிரி நாதர் விழா நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகம், ஆராதணைகள், பக்தி இன்னிசையுடன் மங்களகரமாக தொடங்கிய அருணகிரி நாதர் விழாவிற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த ஆன்மீகப் பேச்சாளரும், பொற்கிழிக் கவிஞரும், நற்றமிழ் நாவலருமான பேராசிரியர் சொ.சொ. மீ. சுந்தரம் அவர்கள் நிகழ்த்திய ஆன்மீக பெருரை பலரின் கவனத்தை ஈர்த்தது.

தமிழ் கடல் தேவக்கோட்டை ராமநாதன் சொற்பொழிவுடன் தவில் செல்வர் ஆர். சிலம்பரசன், ஸ்ரீ சிதம்பர விநாயகர் கோயில் ஆஸ்தான வித்வான் கே. கணபதி ஆகியோரின் நாதஸ்வர கச்சேரியும் நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தது.

செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத்தில் முதல் முறையாக நடைபெற்ற அருணகிரி நாதர் விழா, கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவுகளும் கொண்ட முருகனின் ஆயிரக்கணக்கான இசைச் சந்தங்களை பாடி புகழ்பெற்றவரான அருணகிரி நாதருக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக செபராங் ஜெயா வட்டாரப் பேரவையின் தலைவருமான சிவஸ்ரீ தினேஷ் வர்மன் குருக்கள் தெரிவித்தார்.

அதுமிட்டுமின்றி அருணகிரிநாதர் பெருமான் அருளிய மிகப்பெரிய பொக்கிஷமான திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி போன்றவை மக்களால் தொடர்ந்து போற்றப்படவும், ஆன்மீக சான்றோர்களை நினைவுகூரவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக தினேஷ் வர்மன் குருக்கள் குறிப்பிட்டார்.

செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலயம், சமய வழிபாட்டுடன் சமயக்கல்வி, கலாச்சார நிகழ்வு மற்றும் மாணவர்களுக்கான குருகுலம் போன்ற நிகழ்வுகளையும் தொடந்து நடத்தி வருவதாக ஆலயத் தலைவர் B. அமரேசன் தெரிவித்தார்.

சமய வழிபாட்டுக் கல்வியுடன் அடுத்த ஆண்டு முதல் மருத்துவ முகாம்களையும் ஆலய நிர்வாகம் நடத்தவிருப்பதாக ஆலயத்தின் பொருளாளர் டாக்டர் டி. வேலுடன் திசைகளுக்கு அளித்த நேர்காணலில் அமரேசன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்