பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ சிவன் ஆலயத்திற்குள் நுழைந்த அராஜக கும்பல்

ஆலயத்தில் இருந்த பெண்களிடம் அடாவடித்தனம்

விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசாருக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 14 –

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் சுல்தான் அப்துல் சாமாட் ட்டில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சிவன் ஆலயத்திற்குள் நுழைந்தாக கூறப்படும் அராஜக கும்பல் ஒன்று, ஆலய பொறுப்பாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதுடன், கோவிலில் இருந்த பெண்களிடம் அடாவடித்தனம் புரிந்து, பெரும் பயத்தையும், பதற்றத்தையும், ஏற்படுத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் உள்ள முக்கிய ஆலயங்களின் நிர்வாகங்களை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருவதாக கூறப்படும் இந்தியர்களை உள்ளடக்கிய அந்த குண்டர் கும்பல், ஆகக்கடைசியாக கடந்த மார்ச் 10 ஆம் தேதி, இரவு 9.55 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் சிவன் கோவிலில் இந்த அட்டூழியத்தை புரிந்துள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆலயப் பொறுப்பாளர்களும், பக்தர்களும் புகார் செய்துள்ளனர்.
.

மகா சிவராத்திரி விழாவிற்கு பிறகு ஆலயத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஆலயப் பொறுப்பாளர்களும், ஆலயத்திற்கு வருகை புரிந்த சிவனடியார்களும் ஈடுபட்டு இருந்த போது கைத்தடியுடன் நுழைந்த அந்த கும்பல், ஆலயத்தின் முன் வாசல் கேட்டை இழுத்துப் பூட்டப் போவதாக மிரட்டியதுடன் ஆலயத்திற்கு இருந்தவர்களிடம் பலவந்தமாக நடந்து கொண்டதாக அவர்கள் தங்கள் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதில் 29 வயது பெண் பக்தரிடம் ஆடவர் ஒருவர் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், ஒரு பெண்ணின் கையை முறிந்ததுடன், பலரின் கைப்பேசிகளை பறித்து, கீழே போட்டு உடைத்து சேதப்படுத்தி, அட்டூழியம் புரிந்ததாக அவர்கள் குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் ஐந்து ஆறு இந்திய நபர்கள் ஆலயத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர்களின் இந்த அராஜக செயலை எதிர்த்து பெண் பக்தர்கள் போராடிய போது பெரும் பதற்றமும், அச்சமும் நிலவியதாக ஆலயத்தின் உதவித் தலைவரும், ஆடிட்டராக பணிபுரிந்து வருபவருமான 47 வயது பரமேஸ்வரி கிருஷ்ணா விவரித்தார்.

கோவிலில் அமர்ந்திருந்த தனது அருகில் நெருக்கமாக அமர்வதைப் போல் அமர்ந்த அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபர், சற்றும் எதிர்பார்க்காத நிலையில் தனது தொடையைப் பிடித்ததாக பதற்றம் தோய்ந்த குரலில் விவரித்தார் ஒரு பக்தரான 29 வயது யசோதா ராஜசிங்கம்.

அந்தக் கும்பல் ஆலயத்திற்குள் நடத்திய அராஜகத்தை கைப்பேசியில் படம் எடுத்த தன்னை பிடித்து, கையை முறுக்கி, கைப்பேசியை பறித்து, அதனை கீழே போட்டு உடைத்து, ஆடவர் ஒருவர் அட்டூழியம் புரிந்ததாக ஆலயத்தின் தொண்டுழீயரான 51 வயது கலைச்செல்வி கிருஷ்ணன் தெரிவித்தார்.

அந்த கும்பலின் அராஜக செயலை ஆலயத்தில் இருந்த பக்தர்கள் யாருமே எதிர்பார்க்க வில்லை என்று ஓர் ஆப்பரேட்டர் பணியாளரான 45 வயது அபிராமி ஜனாபிரகாசம் விவரித்தார்.

ஆலயத்திற்குள் அத்துமீறி இத்தகைய அராஜகம் புரிந்த கும்பலுக்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீ சிவன் ஆலயத்தின் தலைவரான ராஜசிங்கம் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.

பழமை வாய்ந்த பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் நிகழ்ந்ததைப் போல பெண்களுக்கு எதிராக புரியப்பட்ட அராஜக செயல் மற்ற ஆலயங்களிலும் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட கும்பலுக்கு எதிராக போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கண்ணன் தலைமையில் திரண்ட ஆலயத்தின் உறுப்பினர்கள் ஒரு சேர போலீசாரை கேட்டுக்கொண்டனர்.

பரமேஸ்வரி கிருஷ்ணா,
ஆலய உதவித் தலைவர்.

யசோதா ராஜசிங்கம்,
ஆலயப் பக்தர்.

கலைச்செல்வி கிருஷ்ணன்,
ஆலயத் தொண்டூழியர்.

அபிராமி ஜனபிரகாஷம்,
ஆலயப் பக்தர்.

ராஜசிங்கம் ஆறுமுகம்,
தலைவர், ஸ்ரீ சிவன் கோவில்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்