பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் மழை பெய்தால் போட்டி ரத்து செய்யப்படுமா?

இந்தியா, மே 21-

ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் மழை பெய்தால் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு பதிலாக கூடுதலாக 2 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ரிசர்வ் டேயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச் சுற்று போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் விளையாடும்.

இதையடுத்து எலிமினேட்டர் போட்டி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் மோதும். தோல்வி அடையும் அணி வெளியேறும். 2ஆவது தகுதிச் சுற்று போட்டி மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மட்டுமே எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடி டிராபியை கைப்பற்றியுள்ளது.

ஐபிஎல் லீக் போட்டிகளில் கடந்த சில போட்டிகள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கியமான கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தப் போட்டி நடைபெற்று அதில் ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்திருக்கும். ஆனால், போட்டி மழையால் ரத்து செய்யப்படவே 3ஆவது இடம் பிடித்து எலிமினேட்டர் போட்டியில் விளையாட இருக்கிறது.

ஆனால், போட்டி நாளிலும் சரி, ரிசர்வ் டேயிலும் சரி மழை பெய்தால், புள்ளிப்பட்டியலில் எந்த அணி அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் 2 அணிகளுமே ஒரே புள்ளிகள் பெற்றிருந்தால் ரன்ரேட்டில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

கடந்த சீசன் வரையில் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சீசன் முதல் பிளே ஆஃப் சுற்று போட்டிக்கும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்