புதிய மாமன்னரிடம் நஜிப் மேல்முறையீடு செய்யலாம்

தமக்கு எதிராக விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத்தண்டனையை 6 ஆண்டுகளாக குறைத்திருக்கும் மன்னிப்பு வாரியத்தின் முடிவில் அதிருப்தி கொண்டிருந்தால் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் புதிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு வாரியத்தின் நடைமுறை செயலாக்கம் மற்றும் அதன் முடிவு, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாகும். அந்த வகையில் மன்னிப்பு வாரியத்திற்கு தலைமையேற்ற முந்தைய மாமன்னரின் முடிவை தாம் மதிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டிற்கு புதிய மாமன்னர் தலைமையேற்றுள்ளார். அவரிடம் நஜீப் மேல்முறையீடு செய்யலாம் என்று அன்வார் தெரிவித்தார்.

தண்டனை பெற்ற ஒவ்வொரு நபரும் மன்னிப்பு வாரியத்திடம் மேல்முறையீடு செய்வதற்கு கொண்டுள்ள உரிமையை நாம் அனைவரும் மதிக்க வேண்டும் என்ற நடப்பு உண்மையை யாரும் புறக்கணித்து விட முடியாது.

நஜீப் விவகாரத்தில் மன்னிப்பு வாரியம் ஒரு முடிவை எடுத்துள்ளது. அந்த முடிவில் அதிருப்தியுற்றவர்கள் அடுத்த கட்டமாக அந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அவருக்கு உரிமையுள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார்.

லஞ்ச ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, தற்போது 12 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நஜீப், பொது மன்னிப்பு கோரி மன்னிப்பு வாரியத்திடம் செய்து கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் அவரின் தண்டனை காலம் 6 ஆண்டு காலமாகவும் அபாரத் தொகை 21 கோடியிலிருந்து 5 கோடி வெள்ளியாக குறைக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு வாரியத்தின் முடிவு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துகள் நிலவி வருவது குறித்து பிரதமர் அன்வார் விளக்கம் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்