பெர்சத்து கட்சியுடன் மீண்டும் கூட்டணி; பக்காத்தான் ஹாராப்பானுக்கே பாதிப்பு

பெட்டலிங் ஜெயா, மார்ச் 19 –

நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலுக்குள் பக்காத்தான் ஹாராப்பான், பெர்சத்து கட்சியுடன் மீண்டும் கூட்டணியை அமைத்துக்கொள்ள வேண்டுமென சட்டத்துறை முன்னாள் அமைச்சர் டத்துக் சைட் இப்ராஹிம் பரிந்துரை ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தார்.

அதுக் குறித்து கருத்துரைத்த துன்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் சின் யி முன் , அந்த பரிந்துரையைச் சாத்தியமாக்குவதற்கு முன்பு, பக்காத்தான் ஹாராப்பான் அதன் எதிர்பாராத விளைவுகளை ஆராய வேண்டுமென வலியுறுத்தினார்.

அம்னோ மற்றும் பெர்சத்து கட்சிகளின் இலக்கிடப்பட்ட வாக்காளர்கள் ஒன்றே. அவ்வகையில், பெர்சத்து கட்சியுடன் பக்காத்தான் கூட்டணியை அமைத்துக்கொண்டால், அது அம்னோ தலைவர்களைக் கோபத்திற்கு உண்டாக்கும் என்றாரவர்.

கடந்த சனிக்கிழமை முன்வைத்திருந்த பரிந்துரையில் பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்துக் ஶ்ரீ அஸ்மின் அலி மீண்டும் சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் டத்துக் சைட் இப்ராஹிம் கூறியிருந்தார்.

அது குறித்தும் கருத்துரைத்த சின் யி முன் , டத்துக் ஶ்ரீ அஸ்மின் அலி உடனான ஒத்துழைப்பு எவ்வாறு பக்காத்தானுக்கு நன்மையை அளிக்கும் என வினவினார்.

உலு கிள்ளாங் சட்டமன்ற தொகுதியை குறுகிய பெரும்பான்மையில் வென்றுள்ள அவர், செல்வாக்கு மிக்கவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவருடன் ஒத்துழைப்பை வைத்துக்கொண்டால், அது பக்காத்தானுக்கு சாதக பலனை அளிக்கும் என்பதும் உறுதியில்லை என்றாரவர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்