பேச்சுவார்த்தியின் மூலம் தீர்வு காண்பதற்கு முயற்சி

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கும் , மாபா எனப்படும் தோட்ட முதலாளிமார்கள் சங்கத்திற்கும் இடையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு சம்பள ஒப்பந்தம் மீதான சர்ச்சையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்வதற்கு மாபா முன்வந்துள்ளது.

மாபாவின் இந்த அறிவிப்பினால், தனது நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பதற்கு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக சபைக்கூட்டம், இன்று வியாழக்கிழமை காலையில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தை சங்கத்தின் தேசியத் தலைவர் எம். தனபாலன் முறையே தொடக்கி வைத்ததைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன், மாபாவுடன் இதுவரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாக நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு விளக்கம் தந்தார்.

கடந்த 1946 ஆம் ஆண்டு தோற்றம் கண்ட தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், கடந்த 78 ஆண்டு காலமாக தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடி வரும் நிலையில் எல்லா காலக்கட்டங்களில் தனது தனித்துவமான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்துள்ளது என்று டத்தோ சங்கரன் குறிப்பிட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி காலாவதியான தோட்டத் தொழிற்சங்கத்திற்கும், மாபாவிற்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கூட்டு சம்பள ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாமல் கடந்த 28 மாத காலமாக நிலுவையில் இருந்து வருகிறது.

நாட்டின் தொழில் உறவு சட்டத்தின் அடிப்படையில் நேரடியாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் மற்றும் மனித வள அமைச்சர் அலுவலகத்தில் சில பேச்சுவார்தைகள் நடைபெற்றன. இருப்பினும் எந்தவொரு இணக்கமும் காணப்படாத நிலையில் இவ்விவகாரத்தை மனித வள அமைச்சர், தொழில் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் என்று டத்தோ ஜி. சங்கரன் குறிப்பிட்டார்.

அதேவேளையில் மனித வள அமைச்சின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட இரண்டு சுற்று பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிற்சங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை கண்டு நிலைத்தடுமாறிய மாபா, இந்த சர்ச்சையை நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதற்கு முன்வந்துள்ளதாக டத்தோ ஜி. சங்கரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பளப் பேச்சுவார்த்தையில் 22 கோரிக்கைகளை தோட்டத் தொழிற்சங்கம் முன்வைத்த போதிலும் தொழிலாளர்களின் வருமானத்தை கருத்தில் கொண்டு 5 அம்ச கோரிக்கைகளை மட்டும் பேச்சுவார்த்தையின் வழி தீர்வு காண முயற்சி செய்து வருவதாக டத்தோ ஜி. சங்கரன் விளக்கினார்.

தொழிற்சங்கத்தை பொறுத்தவரையில் தனிமனித உணர்வுகளுக்கு வயப்படாமல் அங்கத்தினர்களின் நலனை முன்நிறுத்தும் தனது நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்று டத்தோ ஜி. சங்கரன் உறுதி அளித்துள்ளார்.

இந்த நிர்வாக சபைக்கூட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர் தி. வீரன், நிர்வாக செயலாளர் ஏ. நவமுகுந்தன் உட்பட அனைத்து மாநிலங்களின் தொழிற்சங்கப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்