மக்களின் பாதுகாப்பினை வலுப்படுத்த நாட்டில் புதிய 84 தீயணைப்பு நிலையங்கள் தேவை

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு போதுமான சேவைகளையு‌ம் பாதுகாப்பையும் வழங்கும் ஓர் உன்னத நோக்கில், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்திறனையும் அதன் தரத்தையும் மேம்படுத்துவதற்கு மொத்தம் 84 புதிய தீயணைப்பு நிலையங்கள் தேவைப்படுகின்றன.

இதுவரையில் நாட்டில் 337 தீயணைப்பு நிலையங்கள் இருப்பதுடன் தீ ஆபத்துக் குறியீடு அதிகளவில் காணப்படுவதால் தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming கேட்டுக் கொண்டார்.

எனவே, அவசர தேவைகள் உள்ள இடங்களில் முதலில் தீயணைப்பு நிலையங்கள் கட்டப்படும் என்பதுடன் இது நாட்டின் நிதியை சார்ந்து இருப்பது என்பதால் தீயணைப்பு நிலையங்கள் கட்டம் கட்டமாகவே நிறுவப்படும் என்று Nga Kor Ming செய்தியாளர் கூட்டத்தில் நேற்று தெரிவித்தார்.

புதியதாக கட்டப்படும் தீயணைப்பு நிலையங்கள், தற்போதுள்ள நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் சமமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் நாட்டில் 15,000 தீயணைப்பு வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் வேளை, இவ்வாண்டு மேலும் 509 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

அனைத்து நிறுவனங்களும் SOP நடைமுறையை பின்பற்ற தவறக்கூடாது என்பதுடன் பாதுகாப்பினை உறுதி செய்து எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று Nga Kor Ming கூறினார்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை Johor, Ulu Tiram போலீஸ் நிலையத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவத்தை சுட்டிக் காட்டி பேசுகையில், எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள ஒவ்வொரு தீயணைப்பு நிலையமும் அதன் உறுப்பினர்களும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்