மீண்டும் பந்தாடப்பட்டது மித்ரா, அதிரடியாக பிரதமர் துறைக்கு மாற்றம்

புத்ராஜெயா, ஏப்ரல் 03-

மலேசிய இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ரா, மீண்டும் பந்தாடப்பட்டு, பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் துறையிலிருந்து தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்ட மித்ரா, நான்கு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்றப்பட்டுள்ளதாக ஒற்றுமை அரசாங்கப் பேச்சாளர் பாஹ்மி பட்சில் இன்று அறிவித்துள்ளார்.

மித்ராவை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சிலிருந்து பிரதமர் துறைக்கு மாற்றுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆரோன் கோ டகாங்- கும் இணைந்து முடிவு செய்துள்ளதாக பாஹ்மி பட்சில் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் அடிதட்டு மக்களை இலக்காக கொண்டு அவர்களின் சமூகவில், பொருளாதார முன்னேற்றத்திற்காக செடிக் என்ற பெயரில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் துறையின் கீழ் ஒரு இலாகாவாக உருவாக்கப்பட்ட அப்பிரிவுக்கு அரசாங்கம் ஆண்டு தோறும் 100 மில்லியன் வெள்ளி மானிய ஒதுக்கீடாக வழங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் அப்பிரிவு, பிரதமர் துறையிலிருந்து தேசிய ஒற்றுமைத்துறைக்கு மாற்றப்பட்டு மித்ரா என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

22 மாதங்களில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்த நிலையில் நாட்டின் பிரதமராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பின்னர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பொறுப்பேற்று இருந்த நிலையில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹலீமாஹ் சாடிக் மேற்பார்வையில் மித்ரா ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்றப்பின்னர் அவரின் பிரதமர் துறை அமைச்சின் கீழ் இருந்த மித்ரா, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டது.

கடந்த நான்கு மாதத்தில் பெரும் சர்ச்சைக்கு இடமாக விளங்கிய மித்ராவை மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் இந்திய எம்.பி.க்கள் கடந்த சில வாரங்களாக போர்க்கொடி தூக்கி, பெரும் சர்ச்சையில் ஈடுபட்ட வந்தனர்.

குறிப்பாக மித்ரா கூட்டங்கள் பப்பிலும், கோப்பிக்கடைகளிலும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அந்த குற்றச்சாட்டை கூறியதாக கூறப்படும் தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி, இந்திய சமுதாயத்தை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர், கடந்த சில நாட்களாக சவால் விட்ட வண்ணம் அறிக்கைகள் மேல் அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.சமூகத்தின் மத்தியில் மித்ரா பெரும் சர்ச்சைக்கு இடமாக விளங்கியது.

B40 தரப்பினருக்கு பிரித்துக்கொடுக்க வேண்டிய 100 மில்லியன் வெள்ளி சம்பந்தப்பட்ட மித்ரா அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கிக்கொண்டு, பெரும் பாடுபட்டதைத் தொடர்ந்து மித்ராவை தமது தலைமையிலான பிரதமர் துறையே இனி நிர்வகிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடியாக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்