வாளுடன் காட்சிக்கொடுக்கும் அக்மாலுக்கு எதிராக போலீஸ் புகார் இல்லை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 03-

முகநூல் பதிவில் வாள் ஒன்றை கையிலேந்தியாவாறு காட்சிக் கொடுத்து இருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ்– க்கு எதிராக எந்தவொரு போலீஸ் புகாரும் பெறப்படவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

கையில் வாள் ஏந்திக்கொண்டு ஒய்யாரமாக காட்சி தந்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள அந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருக்கு எதிராக போலீசார் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று செனட்டர் தி லியான் கேர் எழுப்பியுள்ள கேள்விக்கு எதிர்வினையாற்றிய ஐஜிபி, அந்த படக்காட்சி தொடர்பாக அக்மாலுக்கு எதிராக எந்தவொரு போலீஸ் புகாரும் செய்யப்படவில்லை என்றார்.

ஒருவருக்கு எதிராக போலீஸ் புகார் இருந்தால் மட்டுமே அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்ற ஒரு நிலையாணையை அரச மலேசியப் போலீஸ் படை கொண்டு இருப்பதாக டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

டாக்டர் அக்மால் சாலேஹ் –ஜப்பானுக்கான தனது அண்மைய பயணத்தின்போது வாளை கையில் ஏந்திக்கொண்டு இருந்த புகைப்படத்தை அவர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தனது முகநூலில் பதிவேற்றம் செய்து இருந்தார்.

எதுவாக இருந்தாலும் எங்களின் நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம். மண்டியிட்டு சாவதைவிட நேருக்கு நேர் நின்று சாவதே மேல் என்று அப்புகைப்படத்திற்கு டாக்டர் அக்மால் தலைப்பிட்டு இருந்தார்.

நாட்டின் பிரதமராக மலாய்க்கார அல்லாத ஒருவர் வர முடியும் என்று அரசியலமைப்புச்சட்டத்தை வியக்கியாணம் செய்ததற்காக டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், போலீசாரால் விசாரிக்கப்பட்ட வேளையில் டாக்டர் அக்மால் ஏன் விசாரிக்கப்படவில்லை, அவர் மீது நிந்தனை சட்டம் ஏன் பாயவில்லை என்று டிஏபி செனட்டர் தி லியான் கேர் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்