முக்கிய பரிபாலனத்தை அச்சுறுத்தும் சம்பவங்கள் திட்டமிட்ட செயலா?

புத்ராஜெயா, மே 20-

நாட்டின் முக்கிய பரிபாலனங்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் தனிநபருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் போன்ற சம்பவங்கள் எதிர்பாராததா? அல்லது திட்டமிடப்பட்ட செயலா? என்பது குறித்து போலீசார் முழு வீச்சில் புலன் விசாரணை செய்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இரண்டு போலீஸ் நிலையங்களில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள், இஸ்தானா நெகாராவிற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தது, செப்புதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கொக்- கிற்கு கொலை மிரட்டல் விடுத்து இருப்பது போன்ற சம்பவங்களை உள்துறை அமைச்சும், போலீஸ் துறையும் கடுமையாக கருதுவதாக சைபுதீன் குறிப்பிட்டார்.

இந்த தனிநபர்களின் நோக்கம்தான் என்ன? இச்சம்பவங்களுக்கு பின்னணி என்ன? இந்த சதிச் செயல்களுக்கு காரணம் என்ன? முதலியவற்றை ஆராய்வதற்கு தற்போது இவ்விவகாரம் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக இன்று புத்ராஜெயாவில் திரைப்பட தணிக்கை வழிகாட்டல் முறையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக நிகழ்ந்துள்ள இந்த சம்பவங்களினால் மக்கள் மத்தியில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டு இருக்கும் சாத்தியத்தை அமைச்சர் சைபுதீன் மறுக்கவில்லை.

எனவேதான் சமூகத் தளங்களில் இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் போலீசாரின் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் அளவிற்கு அடிப்படையற்ற ஆருடங்களை பகிரும் தரப்பினரை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்