ருக்குன் தெத்தாங்காவை வளப்படுத்த 2 கோடி வெள்ளி

பந்திங், மே 15 –

இரண்டு கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு திட்டத்துடன் சமூக முற்போக்கு நடவடிக்கைகளுக்கான ருக்குன் தெத்தாங்காவை வளப்படுத்தும் திட்டத்தை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

சிலாங்கூர், கோலா லங்காட், பந்திங், டேவான் ஶ்ரீ ஜுக்ரா மண்டபத்தில் தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியுடன் இணைந்து அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் இத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.

இரண்டு நாள் நிகழ்வாக நேற்று இரவு, பந்திங்கில் உள்ளூர் மக்களுடன் இணைந்து Jom Santuni SRS எனும் ருக்குன் தெத்தாங்கா ஊர்காவல் ரோந்துப் பணியுடன் தொடங்கி, இன்று நிறைவு பெற்ற ருக்குன் தெத்தாங்காவை வளப்படுத்தும் இத்திட்டமானது, எட்டுத்துறைகளை இலக்காக கொண்டு இந்த நிதி ஒதுக்கீட்டை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் அறிவித்தார்.

பொருளாதாரம், வாழ்க்கைச் செலவினம், சமூக பாதுகாப்பு, தலைமைத்துவம், சமூக நல்வாழ்வு, ஆயுள் கால கல்வி, சுற்றுச்சூழல், மரபுடைமை, கலாச்சாரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இத்திட்டத்தை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங்கும், துணை அமைச்சர் சரஸ்வதியும் தொடக்கி வைத்தனர்.

கடந்த 1975 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஆர்.டி எனப்படும் ருக்குன் தெத்தாங்கா சமூகத்தின் மத்தியில் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை வளப்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும், விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் குறிப்பிட்டார்.

இத்தொடக்க விழாவையொட்டி ருக்குன் தெத்தாங்கா நடவடிக்கையின் ஒரு பகுதியாக பந்திங், சுங்கை லாங் பாருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, முள்ளங்கி பயிரீடு மற்றும் இதர தானிய வகைகள் விளைச்சல் பகுதியை அமைச்சருடன் இணைந்து துணை அமைச்சர் சரஸ்வதி பார்வையிட்டார்.

ருக்குன் தெத்தாங்கா நடவடிக்கையின் மூலம் மக்கள் உணவுப்பொருட்களை தாங்களாகவே உற்பத்தி செய்து கொள்வதை உக்குவிக்கும் வகையில் சமூக விவசாயத்திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளையும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பார்வையிட்டதுடன் அதன் நடவடிக்கைகளிலும் உள்ளூர் மக்களுடன் இணைந்து ஈடுபட்டார்.

மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்த இந்த விவசாய நடவடிக்கைகள், ருக்குன் தெத்தாங்கா மூலம் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் குடியானவர்கள் வாரியமான Lembaga Pertubuhan Paladang- குடன் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு, ஒத்துழைப்புக்கான ஓர் உடன்பாட்டை செய்து கொண்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்