2024 ஆம் ஆண்டு திருவாசக முற்றோதல் பெருவிழா

தேசிய அளவிலான 2024 ஆம் ஆண்டின் ‘திருவாசக முற்றோதல் பெருவிழா’ நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்துமலைத் திருத்தலத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவாசக முற்றோதல் அடியார் திருக்கூட்டம் ஏற்பாட்டில் காலை 7 மணியளவில் இறைவழிபாட்டுடன் தொடங்கிய இப்பெருவிழா திருவாசகம் பாகம் ஒன்று, திருவாசகம் பாகம் இரண்டு என இரண்டு அங்கங்களாக நடைபெற்றன.

மிருதங்கம், வயலின், மோர்சிங் ஆகிய பக்க வாத்தியங்களுடன் பக்தி மணங்கமழ நடத்தப்பட்ட இந்த திருவாசக முற்றோதல் பெருவிழாவில் சிறப்பு பிரமுகராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கலந்து சிறப்பித்தார்.

கடந்த 9 ஆண்டுக்காலமாக நடைபெற்று வரும் இந்த மாபெரும் விழாவிற்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் பல மாநிலங்களிலிருந்து வருகை தந்து பெருவிழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், வாழும் காலத்திலேயே ஓதப்பட வேண்டிய அவசியத்தை டத்தோ ஶ்ரீ சரவணன் தமது உரையில் வலியுறுத்தினார். நமச்சிவாய திருப்பதிகம் பாடி சிவபெருமானை வணங்கினால் தீவினைகளும் துன்பங்களும் நீங்கி நன்மைகள் கிடைக்கும் என்று அவர் புகழ்ந்துரைத்தார்.

இவ்வாண்டு தொடங்கி அனைத்து ஆலயங்களிலும் திருவாசகம் ஓதுதல் மாதம் ஒருமுறை நடைபெற வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழு தலைவர் மாணிக்கம்மாள் செல்லப்பா தமது வரவேற்பு உரையில் கேட்டுக் கொண்டார்.

பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் திருவாசகத்தை ஓதக் கற்று கொள்ள ஊக்குவிப்பதுடன் அடுத்த தலைமுறையினரும் அதன் பொருள் உணர்ந்து, சமயத்தின் மாண்பை அறிந்திட வழிசெய்திடுவதே சிறப்பு என்று மாணிக்கம்மாள் தமது உரையில் கூறினார்.

நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் சிறப்பு வருகையாளர்களுக்கும், விழா சிறப்புற நடைபெறுவதற்கு மெருகூட்டிய இசைக்கலைஞர்களுக்கும் விழா குழு சார்பில் டத்தோ ஶ்ரீ சரவணன் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்