300 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணங்களுக்கு இரண்டாவது ஓட்டுநர் கொண்டிருக்க வேண்டும்

பட்டர்வொர்த், ஏப்ரல் 05-

300 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பயணத்தை மேற்கொள்ளும் பேருந்தில், இரண்டாவது ஓட்டுநர் இருப்பதை விரைவு பேருந்து நிறுவனங்கள் உறுதிபடுத்த வேண்டுமென பினாங்கு சாலைப் போக்குவரத்து துறை ஜேபிஜே-யின் தலைமை இயக்குநர் ஸுல்கிபிலி இஸ்மாயில் வலியுறுத்தினார்.

அத்துடன், 4 மணி நேரத்திற்கும் மேற்பட்ட பயணங்களுக்கும் அந்த நிபந்தனை பொருந்தும். நீண்ட நேரம் பேருந்தை செலுத்தும் ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கும் என்பதோடு, அதில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும். உயிரிழப்பு உட்பட விபத்துகளையும் குறைக்க முடியும் என்றாரவர்.

பெரும்பாலான விரைவு பேருந்து நிறுவனங்கள் அந்த நிபந்தனையைப் பின்பற்றுவதில்லை. கேட்டால், அடுத்த பேருந்து முனையத்திலிருந்து இரண்டாவது ஓட்டுநர் பேருந்தை செலுத்துவார் என காரணம் கூறுகின்றனர். அது சரியல்ல. பயணம் தொடங்கும் போதே, இரண்டாவது ஓட்டுநரும் பேருந்தில் இருப்பது கட்டாயம் என்று ஸுல்கிபிலி இஸ்மாயில் கூறினார்.

அந்த நிபந்தனையை பின்பற்றாத பேருந்து நிறுவனங்கள், போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் ஸுல்கிபிலி இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்