மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள மொரிஸியஸ் அதிபர் பிரதிவிராஜ்சிங் ரூபன், தமது குடும்பத்தினருடன் பத்து மலை திருத்தலத்தை இன்று காலையில் சுற்றிப் பார்த்தார்.
தமது மனைவி அயுக்தா ரூபன் மற்றும் பிள்ளைகளுடன் காலை 9.30 மணியளவில் சிறப்பு வாகனத்தில் பத்து மலை திருத்தலத்தை வந்தடைந்த மொரிஸியஸ் அதிபர் பிரதிவிராஜ்சிங்கை, கோலாலம்பூர் ஶ்ரீ மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ டத்தோ நடராஜா சார்பாக அவரின் புதல்வரும் தேவஸ்தான அரங்காவலருமான டத்தோ என்.சிவக்குமார் மற்றும் தேவஸ்தான செயலாளர் சேதுபதி ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.
பத்து மலை திருத்தலத்தை சுற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, அதிபர் தம்பதியர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேளத்தாள நாதஸ்வர இசை முழக்கத்துடன் அதிபர் தம்பதியருக்குத் தேவஸ்தான சார்பாக டத்தோ சிவக்குமாரும், சேதுபதியும் மாலை, பொன்னாடைப் போர்த்தி சிறப்புச் செய்தனர்.
பத்து மலை படிகட்டில் ஏறி மேற்குகை வரை சென்ற அதிபர் பிரதிவிராஜ்சிங் குடும்பத்தினர் மேல் தலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அத்துடன், பத்து மலை திருத்தலத்தின் வரலாற்று பெருமைகளையும் கேட்டறிந்தனர். உடன் மலேசியாவிற்கான மொரிஸியஸ் நாட்டின் தூதரக அதிகாரிகளும் காணப்பட்டனர்.