அம்னோ தலைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மீதான லஞ்ச ஊழல் வழக்கில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொண்டு வரும் விசாரணையில் சட்டத்துறை தலைவர் இட்ரூஸ் ஹரூன் மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நாட்டின் முன்னாள் சட்டத்துறை தலைவர் அபு தலிப் ஒத்மான் தெரிவித்துள்ளார்.
ஜாஹிட்டிற்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அடிப்படை முகாந்திரங்கள் அல்லது அடிப்படை குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு, வெற்றி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான், தனது தரப்பு வாதங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஜாஹிட் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், குற்றவாளியா? அல்லது இல்லையா? என்பதை உறுதி செய்வதற்கு முன்னதாக, அவர் மீது கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்கள் உள்ளனவா? என்பதை பிராசிகியூஷன் தரப்பு , நீதிமன்றத்தில் முதலில் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே அடுத்த கட்ட நகர்வான எதிர்வாதம் புரியும்படி குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவிட முடியும்.
ஜாஹிட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அடிப்படை உள்ளன என்பதை நீதிபதி மனநிறைவு கொண்டுள்ளார். அதனால்தான், அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜாஹிட் தரப்பில் வாதங்களைக் கேட்டறிவதற்கு அவரை எதிர்வாதம் புரிய உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், எதிர்வாதம் புரிய உத்தரவிடப்பட்டுள்ள ஒருவர், தனது குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளும்படி, சட்டத்துறைத் தலைவருக்குப் பிரதிநிதித்துவ மனுவை சமர்ப்பித்துள்ளார் என்று கூறி ஜாஹிட்டிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பது, சட்டத்துறை தலைவர் மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் மொக்தார் ஹஷிமிற்கு எதிரான கொலை வழக்கு, சிலாங்கூர் முன்னாள் மந்திரி புசார் ஹரூன் இட்ரீஸ்க்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு உட்பட பிரபல வழக்குகளில் சட்டத்துறைத் தலைவராக நீதிமன்றத்தில் ஆஜராகியவரான சட்ட வல்லுநர் அபு தலிப் ஒத்மான் வாதிடுகிறார்.
ஒட்டுமொத்தத்தில் ஒருவர் நீதிமன்றத்தில் எதிர்வாதம் புரிய அழைக்கப்பட்டப் பின்னர், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்வது என்பது சாத்தியமற்றதாகும் என்று கடந்த 1980 முதல் 1993 ஆம் ஆண்டு வரை சட்டத்துறை தலைவராக இருந்தவரான அபு தலிப் ஒத்மான் திட்டவட்டமாக கூறுகிறார்.