
கட்டாய மரணத் தண்டனை அமலாக்கத்தை சட்ட மசோதா நிறைவேற்றத்தின் மூலம் மலேசியா ரத்து செய்துள்ளது. இது தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கு காத்திருந்த 1,300 கடைசி அறை கைதிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்ட கொலைகள் உட்பட கொடூரமான குற்றங்களுக்கு கட்டாய மரணத் தண்டனை ரத்து செய்யப்பட்டு இருப்பது, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளால் உயிர் பறிக்கப்பட்ட தங்கள் மகன், மகள், தந்தை, தாயார் என குடும்ப சொந்தங்களை இழந்தவர்களுக்கு அரசாங்கத்தின் இந்த முடிவு பேரடியாக மாறியது.
முன்னாள் அரசு தரப்பு வழக்கிறஞர்டத்தோ கேவின் மொராயிஸ், கோடீஸ்வரி டத்தோ சோசிலாவத்தி லாவியா, வங்கி மேலாளர் ஸ்டீபன் வோங் ஜிங் குய், பல்கலைக்கழக மாணவி சீ கெய்க் யாப், அன்னி கோக், ஒரு வயது முகம்மது ஹபீஸ் இட்ரிஸ் உப்பட கொடூர கொலைகளில் பலரின் உயிரை காவு கொண்ட இரக்கமற்ற குற்றவாளிகள் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிப்பதா? என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.
2009 ஆம் ஆண்டு பெந்தோங், கம்போங் கெத்தாரியில் வீட்டில் தனியொரு நபராக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 17 வயது மாணவி, 40 வயது காமுகனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அந்த மாணவியை பலமுறை கத்தியால் குத்தி, இறுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.
“ உங்கள் மகளுக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்து இருக்குமானால் சம்பந்தப்பட்ட கொலையாளி, தூக்கிலிருந்து தப்பிக்க அனுமதிப்பீர்களா? என்று வினவுகிறார் தமது அருமை மகளை இழந்த 57 வயது தாயார் டான் சியூ லின்.
என் மகளை கொடூரமாக கொன்ற அந்த கொலையாளி தூக்கிலிடப்பட வேண்டும், ஓர் உயிர் இழப்புக்கு காரணமான நபர் உயிர் வாங்கப்பட வேண்டும் என்று டான் வாதிடுகிறார்.
வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கில் கொலைக் குற்றங்களை புரியும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனையே தீர்வாக இருக்க முடியும் என்று டான் சியூ லின் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நீதித்துறை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டுமே தவிர குற்றவாளிகளை பாதுகாக்கக்கூடாது என்று அவர்கள் வாதிடுகின்றனர். தூக்குத் தண்டனை கைதிகளுக்காக உரிமைப் போராட்டம் நடத்தும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் நோக்கத்தில் உண்மையில்லை. அவை சில தனியார் துறையிடமிருந்து நிதி பெற்றுக்கொண்டு போராடுகின்றன என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மரணத் தண்டனை அகற்றப்பட்டு இருப்பது, குற்றவாளிகளின் நலனுக்காக மட்டுமே அரசாங்கம் போராடியுள்ளது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஒன்றுமில்லை. நீதி கேட்டு வந்த நாங்கள் கைவிடப்பட்டதைப் போல் உணர்கிறோம்.
அண்டை நாடு சிங்கப்பூரை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கொடூர குற்றவாளிகளுக்கு அங்கு மரணத் தண்டனை உறுதியாக உள்ளது. குற்றவாளிகளின் சொர்க்கமாக மலேசியாவை ஒரு போதும் மாற்றிவிட வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
