நான்கு சிறுவர்கள் விடுவிக்கப்பட்ட அதிசயம்

சுற்றுப்பயணிகளுக்குச் சிறந்த மலை வாசஸ்தலமாக விளங்கும் பிரேசர் மலையில் அப்படி ஒரு மாய சக்தி இருப்பது என்பது கட்டுக்கதையாகவே கருதப்பட்டது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கட்டடங்களின் பின்புறமும் அதையொட்டி உள்ள காடுகளிலும் அஃது இருப்பதாகப் பரவலாகச் பேசப்பட்டது.

பிரேசர் மலையில் மலையேறும் குழுவினர் அதனைப் பார்த்ததாகக் கூறுகின்றனர். ஆனால், அதை உறுதிபடுத்தும் அளவிற்கு அவர்கள் கூறிய தகவல்கள் நம்பகத் தன்மையில் இல்லை.
2005ஆம் ஆண்டு, 9, 10, 14 மற்றும் 16 வயதுடைய நான்கு சிறுவர்கள் பிரேசர் மலையில் காணாமல் போயினர். இவர்களில் மூவர் சகோதரர்கள். ஒருவர் உறவுக்காரப் பையன். தங்கள் பெற்றோருடன் பிரேசர் மலைக்கு வந்த அந்தச் சிறுவர்கள் காலை வேளையில் பங்களா வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காணாமல் போயினர்.

இது குறித்து, அந்தச் சிறுவர்களின் பெற்றோர் ரவுப் காவல் நிலையத்திற்குத் தகவல் தந்தனர். காவல் அதிகாரி கலாட்படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, மோப்ப நாய்ப் பிரிவு, பொதுத் தற்காப்புப் படை மற்றும் பிரேசர் மலை காட்டுப் பாதைகளை நன்கு அறிந்துவைத்திருந்த பூர்வக்குடியினர் (ஓராங் அஸ்லி) எனச் சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் அந்த நான்கு சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் எட்டு சதுர கிலோ மீட்டர் தூரம் வரை அந்தச் சிறுவர்களை மூன்று நாள் தீவிரமாகத் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான்காவது நாள் பிரேசர் மலையின் எல்லைப் பகுதியான சுங்கை செம்பாங் என்ற ஒரு நீரோடைப் பகுதியில் அந்த நான்கு சிறுவர்களும் சோர்வுடன் அமர்ந்திருப்பதை ஷமான், பூர்வக்குடியினர் ஒருவர் கண்டுபிடித்தார்.

அந்தச் சுங்கை செம்பாங் பகுதி இதற்கு முன் தேடப்பட்ட இடம்தான். திடீரென்று அந்தச் சிறுவர்கள் எவ்வாறு அவ்விடத்தில் அமர்ந்திருந்தனர்? என்ற கேள்வி மீட்புப் பணியாளரிடமிருந்து வந்தது. அதற்கு ஷமான், அந்த நான்கு சிறுவர்களையும் ‘பூனின்’ என்ற ஒரு மாய சக்தி கடந்த மூன்று நாள்களாகப் பிடித்து வைத்திருந்ததாகக் கூறினார்.

“அந்தச் சிறுவர்களை விடுவதற்குப் பூனினுக்கு விருப்பமில்லை. காரணம் அந்த நால்வரில் 9 வயதுடைய சிறுவனை அதற்குப் பிடித்துவிட்டது. பூஜைகள் செய்து எவ்வளவோ அதனிடம் மன்றாடி பார்த்தேன், அது விடுவதாக இல்லை. குறைந்தபட்சம் நான்கு நாள்களாவது தன்னுடன் வைத்திருப்பதாகவும் அதன்பின் விடுவிப்பதாகவும் அஃது என்னிடம் உறுதி கூறியது.

ஆனால், ஒரு நாளுக்கு முன்னதாகவே அந்தச் சிறுவர்களை அது விடுவித்துவிட்டது. அந்த இயற்கைச் சக்திக்கு எனது நன்றி”, என்று கூறினார் ஷமான்.

அந்த நான்கு சிறுவர்களில் 16 வயது சிறுவனிடம் இது குறித்து கேட்டபோது, அந்தப் பங்களா வீட்டின் பின்புறம் தாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஓர் அழகிய பாதை கண்ணில் தென்பட்டது. அங்குச் சென்று விளையாடுவோம் என்று நினைத்து தமது சகோதரர்களையும் உறவுக்காரப் பையனையும் அழைத்து கொண்டு அவ்விடத்திற்குச் சென்றேன். அப்போது அந்தப் பாதையில் விசித்திரமான ஒலி கேட்டது. இப்படித்தான் எங்களுடைய பயணம் நீண்டு கொண்டு சென்றபோது, ஒரு கட்டத்தில் நாங்கள் பார்த்த காட்சி எதுவும் தென்படாத நிலையில், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சிக்கிக் கொண்டதை உணர்ந்ததாக அந்தச் சிறுவன் குறிப்பிட்டான்.

சிறுவனின் கூற்றுப்படி தங்களை யாரும் ஆட்கொள்ளவில்லை. ஆனால், 9 வயது உறவுக்காரப் பையன் மட்டும் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருந்தான் என்று விவரித்தான்.
சிறுவன் கூறியதுபோல விசித்திரமான மற்றும் மாயமான நிகழ்வுகளின் மூலம் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் ஒரு சக்தி இன்னுமும் பிரேசர் மலையில் காத்திருக்கிறது என்கிறார் மாந்திரீகச் சக்தியைக் கற்றுத் தேர்ந்த அஸ்லியான ஷமான்.

WATCH OUR LATEST NEWS