‘அவசரமாக அழைக்கவும்’ ‘நான் 10 மணிக்கு வீடு திரும்புவேன்’ “உங்களுடன் எத்தனை பேர் வருகிறார்கள்’ ஆள்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் பதிவு எண்ணைக் குறிப்பிடுங்கள்’ இஃது என்ன தகவல்? நிச்சயம் தந்தி தகவல் அல்ல. பிறகு என்னவாக இருக்கும்? டிக் டிக் டிக். இதுதான் பேஜர் சாதனம்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் கைப்பேசி பயன்பாட்டிற்கு முன்னதாக மக்களிடையே குறிப்பாக அலுவலக அதிகாரிகள் மத்தியில் பயன்பாட்டில் இருந்த ஒரு நடமாடும் தொலைத்தொடர்பு சாதனமாகும். தற்போது பேஜரின் பயன்பாடு இல்லை என்றாலும் அது மக்களுக்கு ஆற்றிய சேவை அளவிட
முடியாததாகும். ‘மொட்டோரோலா’, ‘பானாசோனிக்’ போன்ற பல வகையான பிராண்டுகளில் தயாரிக்கப்பட்ட ஒரு பேஜர், அதன் தரத்திற்கு ஏற்ப தொடக்கத்தில் வெ.300 முதல் வெ.500 வரை விற்கப்பட்டது.
நாட்டில் இன்று முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் ‘மெக்சிஸ்’, இந்தப் பேஜர் அறிமுகத்தின் வாயிலாகதான் மக்களுக்கு அறிமுகமானது என்பது வரலாறாகும். அன்றைய நாளில் பேஜர் தொலைத்தொடர்பைக் கையாளும் தலைமைப் பீடமாக ‘மெக்சிஸ்’ விளங்கியது. மெக்ஸிஸ் நிறுவத்தின் துவக்கமே பேஜர் தான்.
வீடு அல்லது அலுவலகத்தில் இருக்கும்போது தொலைபேசியின் வாயிலாக ஒருவரை தொடர்புக் கொள்ளலாம். சம்பந்தப்பட்டவர் வெளியே சென்று விட்டால், இப்போது இருப்பதுபோல் கைப்பேசி பயன்பாடு இல்லாத அந்தக் காலத்தில் பேஜரே பிரதான பங்களிப்பை வழங்கியது. ஒருவரை அவசரமாக அலுவலகத்திற்கு அழைக்க வேண்டும், தம்மை விரைந்து சந்திக்க வேண்டும், நாளை சந்திப்பு நடத்தலாம் போன்ற குறுஞ்செய்திகளைச் சம்பந்தப்பட்டவரிடம் சேர்க்க வேண்டும். என்றால் பேஜர் மூலமாகவே தெரிவிக்க வேண்டும்.
எப்படி? பேஜரில் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கான எந்தவோர் எழுத்துக்களும் இல்லாத நிலையில், இஃது எவ்வாறு சாத்தியமாகும்? பேஜர் மூலம் தகவலை அனுப்புவதற்கு ஒவ்வொருவரிடமும் ஒரு தனிப்பட்ட குறியீட்டு எண் இருக்கும். ஒருவர், ஒருவரைத் தொடர்பு கொண்டு தகவலை அனுப்ப விரும்பினால், முதலில் நாம் நாட வேண்டியது ஒரு தொலைபேசி. தொலைபேசி இல்லாத பட்சத்தில் நாம் நாட வேண்டியது பொதுத் தொலைபேசி. அங்கிருந்து ‘மெக்சிஸ்’ மையத்திற்கு அழைக்க வேண்டும். நாம் தொடர்புக் கொள்ள வேண்டிய நபரின் பேஜர் குறியீட்டு எண்ணையும் தெரிவிக்க வேண்டும். மெக்சிஸ் மையத்தில் நம்முடைய அழைப்பைப் பெறுகின்ற பணியாளரிடம் நாம் சொல்ல வேண்டிய தகவலை மேலே குறிப்பிட்டதைப் போல ரத்தின சுருக்கமாகத் தெரிவிக்க வேண்டும். நம்முடைய தகவலைச் சம்பந்தட்டப்பட்டவரின் பேஜருக்கு அந்த மையம் உடனடியாக அனுப்பி வைக்கும். இதுதான் பேஜரின் பிரதான பங்களிப்பாகும். இதற்கு மாதாந்திர சேவை கட்டணமாக பேஜர் ஒன்றுக்கு சராசரி வெ.35 முதல் வெ.60 வரை விதிக்கப்படுகிறது. ஒருவர் தனது காற்சட்டையின் வார்ப்பட்டையில் பேஜரை வைத்திருந்தாலே அவரைத் தனி அந்தஸ்துக்குரிய நபராகப் பார்க்கப்பட்ட காலமும் இருந்தது. அந்த அளவிற்குப் பேஜருக்குத் தனி மதிப்பு இருந்தது.
இதன் வாயிலாகத் தொலைபேசி தொடர்பு. இல்லாத தனி நபர்களிடம் பேஜர் உரிய தகவல்களைச் சேர்க்கக்கூடிய ஒரு பிரதான் தொடர்பு சாதனமாக அன்றைய நாளில் விளங்கியது. வர்த்தகம் முதல் செய்தித் துறை வரை மிகப் பெரிய பயன்பாட்டுக்குரிய கருவியாக இருந்த பேஜரின் ஆயுட்காலம் நான்கு, ஐந்து ஆண்டுகளில் முடிந்து போனதுதான் பெரும் சோகம். எப்படி? கைப்பேசி அறிமுகத்திற்கு முன் நவீன தொழில்நுட்பத்தின் புதிய வரவாக அறிமுகமான ‘Blackberry’ தகவல் தொடர்பு சாதனம் பேஜரை விழுங்கியது.